புதுடெல்லி: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார். இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக. இந்த சூழலில் புதிய அமைச்சரவையில் தங்களுக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு வேண்டும் என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
“பிரஃபுல் படேல், மத்திய அமைச்சராக பணியாற்றியவர். அவர் தற்போது அமையும் புதிய அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக் கொள்வது சரியாக இருக்காது என நாங்கள் கருதுகிறோம். அதனால் அடுத்த சில நாட்களுக்கு நாங்கள் காத்திருக்கிறோம். ஆனால், எங்களுக்கு கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர் பதவி வேண்டுமென பாஜக வசம் தெளிவாக தெரிவித்துள்ளோம்.
இன்று எங்கள் வசம் ஒரு மக்களவை மற்றும் அவர் மாநிலங்களவை உறுப்பினர் இருக்கலாம். அடுத்த சில மாதங்களில் எங்களுக்கு மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் கிடைப்பார்கள். நாடாளுமன்றத்தில் எங்கள் எண்ணிக்கை 4 என உயரும். அதனால் எங்களுக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு வேண்டும் என சொல்லியுள்ளோம்” என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இது தனக்கு பதவியிறக்கம் போன்றது என பிரஃபுல் படேல் தெரிவித்துள்ளார். இதற்கான தீர்வை பெற கொஞ்ச நாள் காத்திருக்குமாறு பாஜக தெரிவித்து உள்ளதாகவும் அவர் சொல்லியுள்ளார்.
இதே போல என்டிஏ கூட்டணியின் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் தங்களுக்கு குறிப்பிட்ட இலாகாவின் கீழ் மத்திய அமைச்சர் பதவி வேண்டுமென சொல்லி வருவதாகவும் தகவல்.