புதுச்சேரி: பிரதமர் நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.
புதுச்சேரியில் என்ஆர்- காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி அமைத்தவுடன் நியமன எம்எல்ஏக்கள் மற்றும் ராஜ்யசபா எம்பி ஆகியவற்றை பாஜகவே எடுத்துக் கொண்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவரான ரங்கசாமியிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. இந்நிலையில் மக்களவைத் தேர்தலிலும் பாஜகவே போட்டியிட முடிவெடுத்தது. பல முக்கிய தலைவர்கள் பாஜக தரப்பில் போட்டியிடுவார்கள் என்று பேசி வந்த நிலையில் ரங்கசாமி புதுச்சேரியை சேர்ந்தவர் போட்டியிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து நமச்சிவாயம் வேட்பாளராக நிறுத்தப்பட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது மத்திய அமைச்சராக நமச்சிவாயம் வருவார் என்று வலியுறுத்தி வந்தார். ஆனால் பாஜக மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து மன வருத்தத்தில் முதல்வர் ரங்கசாமி இருந்தார்.
மக்களவைத் தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்துக்கு புதுச்சேரி தலைவரான முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அக்கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை.
இதையடுத்து மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திரமோடி இன்று பதவியேற்கிறார். பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், புதுவை மாநில தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவரும், முதல்வருமான ரங்கசாமிக்கு,பாஜக மாநிலத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான செல்வகணபதி மூலம் பிரதமர் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து இன்று காலை விமானம் மூலம் புதுவை முதல்வர் ரங்கசாமி மற்றும் அவரது கட்சி அமைச்சர்கள் புதுடெல்லிக்குச் செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இன்று மதியம் வரை அவர் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.
டெல்லி செல்லும் திட்டம் அவருக்கு இருந்ததாக தெரியவில்லை. ரங்கசாமி வழக்கம் போல் மவுனமாகவே உள்ளார்.அதே நேரத்தில் பேரவை தலைவர் செல்வம் மற்றும் பாஜக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். ஆனால் புதுச்சேரியில் கூட்டணி கட்சியான என்ஆர் காங்கிரஸ் தரப்பில் யாரும் செல்லவில்லை. தேர்தல் தோல்விக்கு பிறகு பிரதமர் பதவியேற்பு விழாவிலும் கூட்டணி கட்சிக் கூட்டத்திலும் புதுச்சேரி மாநில தலைவராக இருக்கும் முதல்வர் ரங்கசாமி பங்கேற்காதது மூலம் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக பேச்சு எழுந்துள்ளது.