“தமிழகத்தில் என்றென்றும் பாஜக காலூன்ற முடியாது” – ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

சென்னை: “தமிழகத்தில் என்றென்றும் பாஜக காலூன்ற முடியாது” என, காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் கூறினார்.

மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த காங்கிரஸ் பிரமுகர்களின் இல்ல திருமண விழாக்களில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்றார். பின்னர், அரசு சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் மோடி தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.ஒரு நாடக நடிகரை போல தனது நடை ,உடை பாவனையை காட்டுகிறார். இந்திய அரசியல் சாசனத்தை தூக்கி முத்தமிட்டு, சிறந்த வேஷத்தை போடுகிறார். தேர்தலுக்கு முன்பு உளறிக் கொண்டிருந்தார். அவர் திருந்துவதற்கு வழியே இல்லை.சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் எப்போது வேண்டுமானாலும் ஆதரவை விலக்கிக் கொள்ளலாம்.

முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவார்களா? என்பதே சந்தேகம். முதலில் தனது கட்சியினரை மோடி அரவணைத்து செல்லவேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை ஆகியோரின் பேச்சில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக தமிழிசை தேர்தலில் நின்று தோல்வியுற்றுள்ளார். அண்ணாமலை கார்ப்பரேசனில் ஒரு கவுன்சிலராக கூட ஜெயிக்க முடியாது.

அண்ணாமலையின் வாய்மொழி ஜாலத்துக்கெல்லாம் தமிழக மக்கள் மயங்கமாட்டார்கள். அண்ணாமலை தமிழக அரசியலில் மிளிரமாட்டார். அவர் எத்தனை அறிக்கை விட்டாலும், ஊடகங்களில் வந்தாலும் வெற்றி பெறமாட்டார். அதிமுகவோடு கூட்டணியில் இருந்ததால் தான் பாஜக ஒரளவு தமிழக மக்களுக்கு தெரிந்திருக்கிறது. தமிழகத்தில் என்றென்றும் பாஜக காலூன்றவே முடியாது. தோல்வியை ஏற்றுக்கொண்டு அண்ணாமலையும், தமிழிசையும் அமைதியாக இருக்க வேண்டும்.

பாஜக எதிரியாக நினைப்பது எதிர்க்கட்சிகளை இல்லை. கூட்டணிக் கட்சிகளைத் தான். பாஜகவை ஒரு நாணயமான கட்சியாக எடுத்துக் கொள்ளவே முடியாது. மோடியை உத்தமர் என, சொல்ல முடியாது. அவர் நிலக்கரி ஊழலை செய்துள்ளார்.தமிழிசை, எல்.முருகன் காலத்தில் இருந்த பாஜக, அண்ணாமலை தலைமையில் தற்போது வலுவிழந்துள்ளது. முக.ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி போன்ற பொற்கால ஆட்சியாக நடக்கிறது.

மூன்றாவது முறையாக மோடி பதவியேற்றது மக்களுக்கு ஏற்பட்ட வேதனை. அது இன்னும் 5 மாததில் தீரும். இவிஎம் வாக்கு இயந்திரத்தில் நம்பிக்கை உள்ளது. முதல் 3 சுற்றுகளில் மோடி பின்னடைவை சந்தித்ததால் இவிஎம் வாக்கு இயந்திரத்தில் நம்பிக்கை உள்ளதாக கருதுகிறேன். ரஜினி மலைக்கு சென்று வந்த பின்பு,அவருக்கு தெளிவு பிறந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.