டி20 உலகக்கோப்பையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. 120 ரன்கள் மட்டுமே டார்க்கெட்டாக நிர்ணயித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் மிகச்சிறப்பாக வென்றிருக்கிறது இந்திய அணி. பும்ராதான் மேட்ச் வின்னர். பாபர் அசாம், முகமது ரிஸ்வான் போன்றோரின் விக்கெட்டுகளையெல்லாம் வீழ்த்தியிருந்தார்.
4 ஓவர்களில் 14 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பும்ராவின் ஓவர்களால்தான் ஆட்டம் இந்தியா பக்கமே திரும்பியது. இந்நிலையில் போட்டிக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பும்ரா வந்திருந்தார். அங்கே போட்டி குறித்தும் அவரது கரியர் குறித்தும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
பும்ரா பேசியதாவது, “போட்டியை வென்றதில் பெரும் மகிழ்ச்சி. போட்டியில் எங்கேயும் பதற்றப்படாமல் அமைதியாக இருந்ததுதான் எங்களுக்குச் சாதகமாக அமைந்தது. நாங்கள் பேட்டிங் செய்த போது சூழல் பௌலிங்கிற்குச் சாதகமாக இருந்தது. ஆனால், பௌலிங் செய்கையில் வானம் தெளிவாகிவிட்டது. பந்து பெரிதாக மூவ் ஆகவில்லை. ஆனாலும் நாங்கள் பதற்றப்படவில்லை. சீராகவும் துல்லியமாகவும் வீச வேண்டியிருந்தது. அப்படியே வீசினோம்!” என்றார்.
“உங்களுடைய கரியரின் ஆகச்சிறந்த கட்டத்தில் இருப்பதாக உணர்கிறீர்களா?” என ஒரு நிருபர் கேள்வி கேட்க, அதற்கு…
“ஒரு வருடத்திற்கு முன்னர் இவர் மீண்டும் ஆடவேமாட்டார். இவருடைய கரியர் முடிந்துவிட்டது எனப் பேசினார்கள். அந்தப் பேச்சு இப்போது அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. ஆனால், நான் இதிலெல்லாம் கவனம் செலுத்துவதில்லை. என்னுடைய ஆகச்சிறந்த கட்டத்தில் இருப்பதாகவெல்லாம் நினைக்கவில்லை. எனக்கு முன்பாக என்னுடைய பௌலிங்கில் இருக்கும் பிரச்சனகளுக்கான தீர்வை கண்டுபிடிக்க முயல்கிறேன். என்னால் கட்டுப்படுத்த இயலும் விஷயங்களை மட்டும் கட்டுப்படுத்த நினைக்கிறேன்.
இந்த மாதிரியான பிட்ச்களில் எப்படி விக்கெட் எடுக்கலாம். பேட்டர்களுக்கு ஷாட் ஆடுவதில் எந்தவிதத்தில் சிரமம் ஏற்படுத்தலாம் என்பதைப் பற்றியே யோசிக்கிறேன். வெளியிலிருந்து வரும் குரல்களுக்கெல்லாம் கவனம் கொடுத்தால் என்னால் சிறப்பாகச் செயல்பட முடியாது. எனக்கென ஒரு தனி வட்டத்தை வகுத்துக்கொண்டு அதற்குள் என்னை மேம்படுத்திக் கொள்வதற்கான விஷயங்களை செய்துகொண்டிருக்கிறேன்” எனப் பதிலளித்தார் பும்ரா.
மேலும் பேசியவர், “முதல் பேட்டிங்கை முடித்த சமயத்தில் ஸ்கோரை நாங்கள் கொஞ்சம் அதிருப்தியாகத்தான் இருந்தோம். இன்னும் கொஞ்சம் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால், அந்த உணர்வை பயமாகவோ பதற்றமாகவோ மாறவிடவில்லை. இனி என்ன செய்யலாம் என்பதில் கவனம் செலுத்தினோம். பாகிஸ்தான் வீரர்கள் ஒரு சில பவுண்டரிகளையும் நல்ல ஷாட்களையும் அடிக்கலாம். அப்போதும் பதற்றமடையக்கூடாது என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டோம்.
விக்கெட்டுக்காக தீவிரமாக முனைப்புக்காட்ட வேண்டும் என நான் நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் ஃபுல் லெந்தில் அதிகமாக வீசி விக்கெட்டுக்கான அந்த மேஜிக் டெலிவரியை நோக்கி ஓடியிருப்பேன். ஆனால், பிட்ச்சில் ஸ்விங்கும் சீமும் முதல் இன்னிங்ஸில் இருந்த அளவுக்கு இல்லை. அப்படியிருக்க ஃபுல் லெந்தில் வீசினால் அவர்கள் எளிதாக அடித்திருக்க முடியும். அதனால் அதிகமாகச் சிந்தித்து எதையும் செயல்படுத்த நினைக்கவில்லை. பெரிய பவுண்டரிகளை மனதில் வைத்து துல்லியத்தன்மையுடன் வீசி அழுத்தம் ஏற்றவே நினைத்தோம்” என்றார்.
குறைவான ஸ்கோரை டிபண்ட் செய்து வெற்றிபெற காரணமாக இருந்த பும்ராவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரின் பந்துவீச்சு பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.