விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே, பழைய வீடு இடிந்து விழுந்ததில், வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி உயிரிழந்தார். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “வீரசோழன் அருகேயுள்ள கீழச்சிம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜபாண்டி – பழனீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி இளமாறன் (வயது 12) என்ற மகனும், கீர்த்திகா (9) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் வீரசோழன் அருகேயுள்ள மேலப்பருத்தியூர் கிராமத்தில் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக ராஜபாண்டி தனது குடும்பத்துடன் சென்றார். அந்த ஊரில் உள்ள பள்ளிவாசல் அருகே நைனம்மாள் என்பவருக்கு சொந்தமாக பழைய வீடு உள்ளது. நைனம்மாள், சென்னையில் குடும்பத்தினருடன் வசித்துவரும் நிலையில் மேலபருத்தியூரில் உள்ள அவரின் பழைய வீட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே இடிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.
வீட்டிலிருந்த பழைய ஜன்னல்கள், கதவுகள் மற்றும் கட்டடத்தில் நிலை நிறுத்தப்பட்ட மர வேலைப்பாடுடைய பொருட்கள் அப்புறப்படுத்தபட்டுள்ளன. இதனையடுத்து, இடையிடையே மழை பெய்ததாலும், வேறு சில பணிகளின் காரணமாகவும் வீடு இடிக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையிலிருந்த அந்த வீட்டின் அருகே, சிறுமி கீர்த்திகா இன்று மதியம் விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்தவீடு மளமளவென இடிந்து விளையாடி கொண்டிருந்த சிறுமி கீர்த்திகா மீது விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் சிறுமியின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த சிறுமியின் பெற்றோர்கள் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கிடந்த கீர்த்திகாவை, உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டதுடன் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கீர்த்திகா அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மதுரை செல்லும் வழியிலேயே சிறுமி கீர்த்திகா பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரின் உடல் கூராய்வுக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து வீரசோழன் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்றனர். வீதியில் விளையாடி கொண்டிருந்தபோது வீடு இடிந்துவிழுந்து 9 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb