10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரள மாநிலத்துக்கு 2 மத்திய அமைச்சர்கள் கிடைத்துள்ளனர். திருச்சூர் எம்.பி-யான சுரேஷ் கோபிக்கு சுற்றுலா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கோட்டயத்தைச் சேர்ந்த ஜார்ஜ் குரியனுக்கு சிறுபான்மை நலத்துறை, மீன்வளத்துறை, கால்நடை மற்றும் பால்வளத்துறை ஆகிய துறைகளின் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.க சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற சி.பி.எம், காங்கிரஸ் பிரசாரத்தை முறியடிக்கும் விதமாக ஜார்ஜ் குரியன் மத்திய அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளதாக கேரள பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் வி.முரளீதரன் கருத்து தெரிவித்துள்ளார்.
யார் இந்த ஜார்ஜ் குரியன்?
கேரள மாநிலம், பாலா மறை மாவட்ட உறுப்பினராக உள்ள ஜார்ஜ் குரியன், கோட்டயம் காணக்காரி-யில் வசித்து வருகிறார். கிறிஸ்தவரான இவர் 1978-ம் ஆண்டு கல்லூரியில் படிக்கும்போது ஜனதா பார்ட்டி மாணவர் அமைப்பின் நிர்வாகியாகச் செயல்பட்டார். அப்போது சி.பி.எம் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ நிர்வாகிகளால் தாக்கப்பட்ட வரலாறும் ஜார்ஜ் குரியனுக்கு உண்டு. 1980-ல் ஜனதா பார்ட்டியில் இருந்து பா.ஜ.க-வில் இணைந்தார். பாலா புனித தாமஸ் கல்லூரியில் முதுகலை முடித்தவர், முழுநேர அரசியலில் ஈடுபட்டார். பா.ஜ.க இளைஞரணியில் மாநில மற்றும் அகில இந்திய பொறுப்புகளை வகித்தார்.
கேரளாவைச் சேர்ந்த ஓ.ராஜகோபால் மத்திய அமைச்சராக இருந்த சமயத்தில் அவருடைய ஓ.எஸ்.ஏ.டி-யாகவும், தேசிய சிறுபான்மை ஆணைய துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்தார். மாநில பொதுச்செயலாளராக இருந்த சமயத்தில் கேரள மாநில பா.ஜ.க தலைமை அலுவலக பொறுப்பில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டார். 1991 தேர்தலிலும், 1998 தேர்தலிலும் கோட்டயம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட்டார். 2016-ல் நடந்த சட்டசபை தேர்தலில் புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல்களில் தோல்வியைத் தழுவினாலும் தொடர்ந்து பா.ஜ.க நிர்வாகியாகவே பயணித்தார்.
ஜார்ஜ் குரியனின் மனைவி ஓ.டி.அன்னம்மாள் ராணுவத்தில் லெப்டினண்ட் கர்னலாக பணி செய்து ஓய்வு பெற்றவராவார். இவர்களுக்கு ஆதர்ஸ், ஆகாஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். ஜார்ஜ் குரியன் இளைஞராக இருக்கும்போதே அவரை பா.ஜ.க-வில் இருந்து விலகும்படி உறவினர்கள் பலரும் அட்வைஸ் செய்துள்ளனர். ஆனால், அவர் பா.ஜ.க-வில் தீவிரமாக செயல்பட்டார். எந்த விவாதங்களுக்கும் இடமளிக்காமல் கொடுத்த பணிகளை செவ்வனே செய்துவந்துள்ளார். இதையடுத்து இப்போது மத்திய இணை அமைச்சராக உயர்ந்துள்ளார்.
இது குறித்து மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் கூறுகையில், “நான் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. என்னை சில இடங்களுக்குச் செல்லும்படி கூறினார்கள். அங்கு சில குறிப்புகள் கிடைத்தன. ஆரம்பத்தில் என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை, இறுதியில் பிரதமர் அலுவலகத்துக்குச் செல்லும்படி கூறினார்கள். அதன் பிறகுதான் என்ன நடக்கிறது என என்னால் யூகிக்க முடிந்தது. அதைத் தொடர்ந்து மீடியாக்களில் எனது போட்டோவுடன் செய்தி வந்த பிறகுதான் மத்திய அமைச்சர் என்ற உறுதி கிடைத்தது. வளர்ச்சிக்காகவும், அனைத்து சமூகத்தையும் ஒன்றாகப் பாவித்து செயல்படுவேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb