மதுரை: மதுரை ஆதீனம் மட வழக்கில் தற்போதைய ஆதீனம் சேர்க்கப்பட்டதற்கு எதிராக நித்யானந்தா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இது தொடர்பாக ஐகோர்ட் கிளையில் நித்யானந்தா தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவில், “மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக என்னை கடந்த 2012-ல் அப்போதைய ஆதீனம் அருணகிரிநாதர் அறிவித்தார். பின்னர் எதிர்ப்பு காரணமாக, அந்த அறிவிப்பை அருணகிரிநாதர் திரும்பப் பெற்றார். இது தொடர்பான வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அருணகிரிநாதர் இறப்புக்குப் பிறகு முறைப்படி நான் தான் அடுத்த ஆதீனமாக பொறுப்பேற்று இருக்க வேண்டும். ஆனால் எந்த ஒப்பந்தம், உயில் இல்லாமல் 293-வது ஆதீனமாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் 293-வது ஆதீனமாக தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் சுவாமி ஏற்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளார். இது சட்டவிரோதம்.
எனவே, என் வழக்கில் 293-வது ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சேர்க்கப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை ஆதீனம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையேற்று விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.