ஒடிசாவில் 24 ஆண்டுக்கால நவீன் பட்நாயக்கின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது பா.ஜ.க. 2000 முதல் 2009 வரை பி.ஜே.டி-யோடு கூட்டணியிலிருந்த பா.ஜ.க, நடந்து முடிந்த ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் 74 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க உள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்தே ஒடிசாவின் முதல்வராகப் பதவியேற்பவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தற்போது நான்காவது முறையாக எம்.எல்.ஏ-வாக தேர்வாகியுள்ள ‘மோகன் சரண் மஜி’ முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த மோகன் சரண் மஜி?!
இவர் ஒடிசாவின் 15-வது முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். 53 வயதாகும் மோகன், ஒடிசாவின் ஜும்புரா பகுதியைச் சேர்ந்தவர். பழங்குடி வகுப்பைச் சேர்ந்த இவர், தனது பி.ஏ பட்டத்தை கியோஞ்சர் பகுதியில் உள்ள சந்திர சேகர் கல்லூரியில் பெற்றுள்ளார். தனது இளங்கலை சட்டப் படிப்பை டென்கோனல் சட்டக் கல்லூரியில் முடித்துள்ளார்.
இவர் 1997 முதல் 2000 வரையிலான காலத்தில் பஞ்சாயத்துத் தலைவராக (சாராபஞ்ச்) பணியாற்றியுள்ளார். அதன் பிறகு 2000, 2004, 2019, மற்றும் 2024 என நான்கு முறை கியோஞ்சர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஜே.டி-யைச் சேர்ந்த மீனா மஜியை 11,577 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளார். புதன்கிழமை மாலை 5 மணிக்கு, ஜனதா மைதானத்தில் நடைபெற உள்ள இவருடைய பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்விற்கு பா.ஜ.க சார்பில் முன்னால் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb