- அஷ்ரப்பின் கனவையும் நனவாக்குவேன் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்
ஒலுவில் துறைமுகம் கடற்றொழில் துறைக்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்யப்படுமென தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இத்துறைமுகம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் அமரர் அஷ்ரப் கண்ட கனவையும் நனவாக்கப் போவதாக தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சில் நேற்று (11.06.2024) இடம்பெற்ற ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான விசேட கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்தும் தெரிவிதத்தாவது:
ஒலுவில் முறைமுக அபிவிருத்தி தொடர்பாக இலங்கை துறைமுக அதிகார சபையும் சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. எனது வேண்டுகோளின் பேரில் அந்த நகர்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நான் ஒழுவில் துறைமுகத்துக்கு அண்மையில் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டேன். அப்பொழுது மக்கள் இத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் தமது கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லையென என்னிடம் தெரிவித்தனர். அதிலுள்ள யதார்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடியுமாகவுள்ளது. இத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் நான் விரைந்து முடிவெடுக்க வேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளது. இந்த துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்வதைவிடவும் கடற்றொழில் துறைமுகமாக அபிவிருத்தி செய்வதே பொருத்தமானது என்பது எனது அபிப்பிராயம். அதுவே இப் பகுதி மக்களின் விருப்பமாகும். பிரதேச மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாட்டுக்கும் நன்மை ஏற்படும் விதத்தில் இதனை அபிவிருத்தி செய்ய வேண்டும். அமரர் அஷ்ரப் இத் துறைமுகம் தொடர்பாக கண்ட கனவை நான் நிச்சயம் நனவாக்குவேன் – என்றார்.
அத்துடன் அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் மேலதிக செயலாளர் திருமதி அனுஷா கோகுல தலைமையில் கரையேரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம், இலங்கை துறைமுக அதிகார சபை, ஒலுவில் பல்கலைக் கழகம், நாரா, கடற்படை, சிவில் மற்றும் பொது மக்களை உள்ளடக்கி விசேட குழுவொன்று அமைக்கப்பட்டதுடன் அக் குழுவின் அறிக்கையை ஒரு வாரத்தில் அமைச்சரிடம் ஒப்படைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.