இந்தியா – அமெரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி நியூயார்க்கில் ஜூன் 12ஆம் தேதி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியை பாகிஸ்தான் உற்று நோக்கி கொண்டிருக்கிறது. ஏனென்றால், அயர்லாந்து, பாகிஸ்தானை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இந்தியா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டு போட்டிகளி வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் ரன் ரேட்டின் படி அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்த சூழலில் இப்போட்டி மழையால் கைவிடப்பட்டால் பாகிஸ்தான் அணி குரூப் 8 சுற்றுக்கு முன்னேறுவது கனவாகிவிடும். இப்போட்டியில் அமெரிக்கா தோற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு மயிரிழையில் வாய்ப்பு இருக்கிறது.
நியூயார்க்கில் வானிலை எப்படி இருக்கும்?
போட்டி நடைபெறும் நேரத்தில் வானிலை தெளிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையின்படி, ஜூன் 12 ஆம் தேதி நியூயார்க்கில் வெயில் மற்றும் இதமாக இருக்கும். காலையில் 33% மேகமூட்டத்துடன் இருக்கும், மதியம் 45% மேகமூட்டத்துடன் இருக்கும். இப்போட்டி உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணிக்கு போட்டி தொடங்கும். இந்தியாவில் இரவு 8 மணிக்கு போட்டியை நேரலையில் பார்க்கலாம், வானிலை தகவல்களின்படி, போட்டி நடைபெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
ஒருவேளை கைவிடப்பட்டால்?
இந்தப் போட்டியில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றாலும், மழையால் இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டால், பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறும். ஏனெனில் இந்தியாவும், அமெரிக்காவும் தலா 1 புள்ளியைப் பெறும். இதன்மூலம் இரு அணிகளும் தலா 5 புள்ளிகளை பெறும். இதுபோன்ற சூழ்நிலையில், பாகிஸ்தான் தனது மீதமுள்ள போட்டிகளில் வென்றாலும் 4 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். அப்படியான சூழலில் டாப்-2 இல் இந்தியாவும் அமெரிக்காவும் இடம்பிடித்து சூப்பர்-8 க்கு தகுதி பெறும்.
அமெரிக்கா தோற்க பாகிஸ்தான் பிரார்த்தனை
இந்தப் போட்டியில் இந்தியா அமெரிக்காவை வீழ்த்த வேண்டும் என்று ஒட்டுமொத்த பாகிஸ்தானும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் சூப்பர்-8க்கு பாகிஸ்தான் முன்னேற வாய்ப்பு இருக்கிறது. அதாவது பாகிஸ்தான் அணி மீதமுள்ள 2 போட்டிகளை பெரிய வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். எஞ்சிய போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் அமெரிக்கா தோற்றால் பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால், இந்தியாவுன் அமெரிக்கா குரூப் 8 சுற்றுக்கு முன்னேறும்.