பாராளுமன்ற செயலாளர் நாயகங்கள் மற்றும் அதிகாரிகளுக்காக நடத்தப்படும் தலைமைத்துவத்துக்கான வதிவிட செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வு

பாராளுமன்ற செயலாளர் நாயகங்கள் மற்றும் அதிகாரிகளுக்காக நடத்தப்படும் தலைமைத்துவத்துக்கான வதிவிட செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

பாராளுமன்றங்களின் செயலாளர் நாயகங்கள் மற்றும் அதிகாரிகளுக்காகப் பொதுநலவாய பாராளுமன்ற சங்கம் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தலைமைத்துவம் தொடர்பான வதிவிட செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (10) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய இராஜ்ஜியம், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 15 பொதுநலவாய நாடுகளின் சுமார் 40 பிரதிநிதிகள் இதன்போது கலந்துகொண்டதுடன், இந்த வதிவிட செயலமர்வு இம்மாதம் 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறுகின்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், ஜனநாயகத்தை வலுப்படுத்தி நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு பாரிய பொறுப்பு அதிகாரிகளுக்குக் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். அத்துடன், பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றங்களில் தொழில் ரீதியான தொடர்புகள் மற்றும் நட்புறவை வளர்ப்பதற்கு இதனை மேடையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த செயலமர்வை ஏற்பாடு செய்தமை தொடர்பில் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்துக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர குறிப்பிடுகையில், இந்நிகழ்வின் நோக்கம் தொழில் ரீதியான திறன்களை விருத்தி செய்வது மாத்திரமன்றி பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்றங்களுடன் தொடர்ச்சியான உறவுகளை ஏற்படுத்துகின்றது எனத் தெரிவித்தார். அத்துடன், இலங்கையில் இந்த செயலமர்வை நடாத்துவது தொடர்பில் பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்துக்கு நன்றிகளைத் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற பணியாட்தொகுதியின் தலைவரும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன குறிப்பிடுகையில், பொதுநலவாய குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்துக்கொள்வதற்கும், கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் இது முக்கியமானதாகும் எனத் தெரிவித்தார். அத்துடன், இந்த செயலமர்வை ஏற்பாடு செய்வதற்கு பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.

பொதுநலவாய பாராளுமன்ற சங்க தலைமையகத்தின் நிகழ்ச்சித்திட்டத் தலைவர் மத்தியூவ் சலிக் கருத்துத் தெரிவிக்கும் போது, இந்த செயலமர்வை இலங்கையில் நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை பாராளுமன்றம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

எஸ்வாடினி இராஜ்ஜியத்தின் பாராளுமன்ற செயலாளர் நாயகம் பெனடிக்ட் ஷாபா, இலங்கை பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன, அவுஸ்திரேலிய பாராளுமன்ற சேவைகள் திணைக்களத்தின் பிரதான நிறைவேற்றதிகாரி மார்க் வெப், நியூசிலாந்து பாராளுமன்ற சேவைகளின் பிரதம நிறைவேற்றதிகாரி ரபாயல் கொன்சாலெஸ்-மொன்டெர்டோ, நியூசிலாந்தின் சர்வதேச பயிற்றுவிப்பாளர் கேட் பராகர் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாகு ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.