கீர்த்தி சுரேஷின் ‘மகாநதி’ திரைப்படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ‘கல்கி 2898 AD’ திரைப்படம்.
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் கதை மகாபாரதக் காலம் தொடங்கி கி.பி 2898-ம் ஆண்டு வரை நிகழ்வதாக அமைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் நிகழக்கூடிய விஷயங்கள் எனப் புனைவாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் கிராபிக்ஸுக்கு படக்குழு மாபெரும் உழைப்பை செலுத்தியிருக்கிறது. அதிரடி சண்டைக் காட்சிகளுடன் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
‘மகாநதி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த ‘கல்கி 2898 AD’ ப்ராஜெக்ட்டை 2019-ல் கையில் எடுத்தார் இயக்குநர் நாக் அஸ்வின். 2020-ல் இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியை அறிவித்திருந்தனர். கொரோனா சூழலில் பல திரைப்படங்களின் படப்பிடிப்பு தள்ளிப்போனதுபோல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பும் தடைப்பட்டு தொடங்குவதற்கு தாமதமானது. இப்படியான சூழலுக்குப் பிறகு 2021 ஜூலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. இத்திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்ட செட்களில் நடைபெற்றிருக்கிறது.
இத்திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் எடுத்திருக்கிறார்கள். கிட்டதட்ட 600 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுமட்டும் உண்மையானால் அதிக பட்ஜெட்டில் உருவாகியிருக்கிற இந்தியத் திரைப்படம் என்ற பெருமையையும் இத்திரைப்படம் சொந்தமாக்கிக் கொள்ளும். பெரும்பாலான காட்சிகளில் தரமான கிராபிக்ஸுடன் கூடிய விஷுவல்களை காட்சிப்படுத்த படக்குழு பலவற்றை திட்டமிட்டு உழைத்திருக்கிறது. குறிப்பாக விஷுவல்களுக்காக செர்பியன் ஒளிப்பதிவாளரான ஜோர்ட் ஸ்டோஜில்கோவிச்சை அழைத்து வந்திருக்கிறார்கள்.
நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் முழுநீள தெலுங்கு திரைப்படம் இதுதான். இதற்கு முன்பு நாகர்ஜூனா நடித்த ‘மனம்’, சிரஞ்சீவி நடித்த ‘சைரா நரசிம்மா ரெட்டி’ ஆகிய திரைப்படங்களில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் முழுவதும் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் பயணிக்குமாம். நடிகை தீபிகா படுகோன் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமும் இதுதான். மேலும், சமீபத்தில் வெளியாகியிருந்த டிரைலரில்தான் முதன் முதலாக நடிகர் கமல் ஹாசனின் தோற்றத்தைக் காட்சிபடுத்தியிருந்தார்கள்.
வயது முதிர்ந்த பாத்திரமாக அவரின் கதாபாத்திரத்தை அமைத்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் முக்கிய வில்லனாக பெங்காலி நடிகர் சஸ்வதா சேட்டர்ஜி நடித்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் இத்திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில்தான் நடித்திருக்கிறாராம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன். கமலும் அமிதாப் பச்சனும் இதற்கு முன்பு 1985-ல் வெளியான ‘ஜெராஃப்தர்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். 39 வருட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சேர்ந்து இதில் நடித்திருக்கிறார்கள்.
நடிகை ஷோபனாவும் பல வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவிற்கு வந்திருக்கிறார். கடைசியான இவர் தெலுங்கில் மோகன் பாபுவுடன் இணைந்து நடித்திருந்த ‘கேம்’ திரைப்படம் 2006-ல் வெளியாகியிருந்தது. இவர்களை தாண்டி தமிழ் நடிகர் பசுபதி, மலையாள நடிகை அன்னா பென் ஆகியோரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ‘புஜ்ஜி’ என்ற எலெட்ரிக் கார் வலம் வருகிறது. இந்த காரைகூட சமீபத்தில் மக்களின் பார்வைக்காக அறிமுகப்படுத்தினார்கள். இந்த காருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ்தான் குரல் கொடுத்திருக்கிறார். இதுபோல சில கார்களுக்காக இயக்குநர் நாக் அஸ்வின் மஹேந்திரா நிறுவனத்திடம் கேட்டு இப்படியான அதிநவீன எலெக்ட்ரிக் கார்களை பெற்றிருக்கிறார்.