குவைத்தில் தமிழர்கள் பணிபுரிந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து – 41 பேர் பலி

மங்காஃப்: குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களின் பலர் இந்தியர்கள் என்று அஞ்சப்படுகிறது. 43 பேர் காயமடைந்துள்ள நிலையில், இவர்களில் 30 பேர் இந்தியர்கள் என தகவல் கிடைத்துள்ளது.

தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்ததை குவைத் துணைப் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டிடம் மலையாள தொழிலதிபர் கேஜி ஆபிரகாமுக்கு சொந்தமான NBTC குழுமத்திற்கு சொந்தமானது. இன்று அதிகாலை, கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள சமையலறையில் ஏற்பட்ட தீ, மற்ற தளங்களுக்கும் வேகமாக பரவியுள்ளது. இந்தக் கட்டிடத்தில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட சுமார் 195 தொழிலாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. முதல்கட்ட தகவல்படி உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தொழிலாளர்கள் குறித்த உதவி எண்ணாக 965-65505246 தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தீ விபத்து குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “குவைத் தீ விபத்து குறித்த செய்தியால் அதிர்ச்சி அடைந்தேன். 40 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் தூதர் முகாமுக்குச் சென்றுள்ளார். அடுத்தகட்ட தகவலுக்காக காத்திருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு இந்திய தூதரகத்தைச் சேர்ந்த ஆதர்ஷ் ஸ்வைகா நேரில் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள 30 இந்தியர்களை நேரில் சந்தித்தார். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் வழங்கம் என உறுதி அளித்துள்ளார். அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருமே விரைவில் குணமடைவார்கள் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.