விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இன்னொரு பக்கம் ரிலாக்ஸ் ட்ரிப் ஆக விஜய் வெளிநாட்டில் இருந்து வரும் சூழலில், ‘தளபதி 69’ படத்தின் வேலைகளும் தீவிரமடைந்து வருகின்றன.
வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் விஜய் இப்போது நடித்து வரும் படம் ‘தி கோட்’. இதில் விஜய்யின் ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மோகன், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, யோகிபாபு, கஞ்சா கருப்பு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்து வரும் இப்படத்தின் முதல் சிங்கிளான ‘விசில் போடு’ வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் அப்பா – மகன் இரு ரோல்களில் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் போர்ஷன் முழுவதும் ஷூட் செய்யப்பட்டு விட்டதால், படத்தின் கிராபிக்ஸ் வேலைகளை ஆரம்பித்து விட்டனர். இதற்காக விஜய், வெங்கட்பிரபு எனப் பலரும் அமெரிக்கா பறந்தனர். விஜய் தவிர பலரும் சென்ற வாரம்தான் சென்னை திரும்பினார்கள்.
‘தி கோட்’ படத்தின் வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு, சின்னதொரு ரிலாக்ஸ் ட்ரிப் ஆக, வெளிநாடு பறந்தார் விஜய். வரும் ஜூன் 22ம் தேதியில் அவரது பிறந்தநாள் வருவதால், அதற்கு முன்னதாக சென்னை திரும்புகிறார். இந்தப் பிறந்த நாளின் போது, படத்தின் டீசரோ அல்லது இரண்டாவது சிங்கிளோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே வெங்கட்பிரபுவின் வீட்டில் விசேஷமாக பிரேம்ஜியின் திருமணம் காரணமாக மீதமுள்ள பட வேலைகளுக்கு சின்னதொரு பிரேக் எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. சென்னை திரும்பும் விஜய் வந்ததும் முதல் வேலையாக படத்தின் டப்பிங் பேசுவார் என்கிறார்கள்.
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 12ம் ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களை சந்தித்து பரிசுகள் அளிக்கிறார். சமீபத்தில் கூட அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ”தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்!” எனச் சொல்லியிருந்தார் விஜய். அதன்படி மாணவர்களை இம்மாதம் 28ம் தேதி மற்றும் ஜூலை 3ம் தேதி இருகட்டங்களாகச் சந்திக்கிறார். அதற்கான வேலைகளும் மும்முரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.