நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்; மருத்துவ கலந்தாய்வுக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வினாத்தாள் கசிவு, மதிப்பெண் முரண்பாடு போன்றவற்றால் நீட்தேர்வின் புனிதத் தன்மை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக பதில்அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. எனினும், மருத்துவ கலந்தாய்வை நடத்த தடை இல்லை என்று அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில மாநிலங்களில் நீட் தேர்வு நடப்பதற்குமுன்னதாகவே வினாத்தாள் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதேபோல, குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மதிப்பெண்களில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் கூறி 2024-ம்ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகள் விக்ரம் நாத், அஹ்ஸானுத்தீன் அமானுல்லாஹ் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு இந்த மனுநேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் குளறுபடிகள் காணப்படுவதை எளிதாக கடந்து செல்ல முடியாது.

தேசிய தேர்வு முகமைதான் இந்த தேர்வை நடத்துகிறது. இந்த நிலையில், வினாத்தாள் கசிவு,மதிப்பெண் முரண்பாடு போன்றவற்றால் தேர்வின் புனிதத் தன்மை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இதுகுறித்த தெளிவான, விரிவான பதில்கள் எங்களுக்கு தேவை.

எனவே, நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு (என்டிஏ)நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.

இருப்பினும், மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நிறுத்திவைக்க நாங்கள் விரும்பவில்லை. அந்த நடைமுறையை தொடரலாம்.

இவ்வாறு நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

நீட் தேர்வு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வு முன்னிலையில் பட்டியலிட உத்தரவிட்டு ஜூலை 8-ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையே, 2024-ம் ஆண்டுக்கான நீட் தேர்வில் ஏற்கெனவே பங்கேற்ற 1,600 மாணவர்களின் குறைகள் தொடர்பாக உயர் அதிகாரம் கொண்ட குழு மூலம் ஆய்வு செய்ய தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.