நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருந்தது.
இதனால் பேச்சிப்பாறையில் இருந்து விநாடிக்கு 2000 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. இதனால் கோதையாறு, புத்தன்அணை, திற்பரப்பு, திருவட்டாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு பகுதிகளி்ல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
தற்போது மலையார பகுதிகளில் மிதமான சாரல் மழை மட்டும் பொழிந்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. பேச்சிப்பாறை நீர்மட்டம் 45 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 700 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 735 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.
இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு குறைந்து வெள்ள அபாயம் நீங்கியது. திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கடல்போல் ஓடிய வெள்ளம் தற்போது சகஜநிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் 3 நாட்களுக்கு பிறகு இன்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 67 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 437 கனஅடி தண்ணீர் வருகிறது. நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 17 அடியை தாண்டியுள்ளது.