USA vs IND: இந்திய அணிக்கு சூப்பர் 8 போக நல்ல சான்ஸ்… இலக்கு இவ்வளவுதான்!

USA vs IND Match: இந்தியா – அமெரிக்கா அணிகள் மோதும் குரூப் சுற்று போட்டி நியூயார்க் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய நேரப்படி 8 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. அமெரிக்க அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. அமெரிக்க கேப்டன் மோனக் பட்டேல் சிறு காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை. ஜோன்ஸ் கேப்டனாக செயல்படுகிறார். 

தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷ்தீப் வீசிய முதல் ஓவரில் ஜஹாங்கிர், கவுஸ் ஆகியோர் ஆட்டமிழந்தனர். அதில் ஜஹாங்கிர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். தொடர்ந்து பவர்பிளேவில் சிறப்பாக வீசிய இந்திய அணி 6 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே கொடுத்தது. 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தது. 

கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஆரோன் ஜோன்ஸ் இந்த போட்டியில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 22 பந்தில் ஒரே ஒரு சிக்ஸரை மட்டுமே இன்று அவரால் அடிக்க முடிந்தது. 8 ஓவர்களில் 26 ரன்களை மட்டுமே அடித்திருந்த அமெரிக்க அணிக்கு ஷிவம் தூபே தெய்வமாக வந்து 11 ரன்களை வாரி இறைத்தார். அதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடக்கம். இருப்பினும், இந்திய அணியின் பந்துவீச்சு சற்று டைட்டாகவே இருந்தது.

ஸ்டீவன் டெய்லர் 24(30), நிதிஷ் குமார் 27(23) ஆகியோர் சற்று நிலைத்து நின்று விளையாடினர். பும்ரா வீசிய 16ஆவது ஓவரில் 14 ரன்கள் வந்தது. இருப்பினும் அடுத்த ஓவரில் கோரி ஆண்டர்சன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். 18ஆவது ஓவரிலும் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். கடைசி இரண்டு ஓவர்களிலும் பெரிதாக ரன் வரவில்லை. இதன்மூலம், அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்களே எடுக்கப்பட்டது. 

அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 9 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா 2 மற்றும் அக்சர் பட்டேல் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு வர 111 ரன்களை அடித்தால் போதுமானது. மேலும், இந்த போட்டியில் தோல்வியடையும் அணி அடுத்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற முடியும். அமெரிக்க அணி அயர்லாந்து அணியுடனும், இந்திய அணி கனடா அணியுடனும் அடுத்து விளையாட உள்ளன. 

இதில் இந்திய அணியும், அமெரிக்க அணியும் அடுத்தடுத்து வெற்றி பெற்றுவிட்டால் பாகிஸ்தான் அணியின் சூப்பர் 8 கனவு தகர்ந்துவிடும். மேலும், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளின் சூப்பர் 8 கனவும் ஊசலாடி வருகிறது. ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து – மேற்கு இந்திய தீவுகள் அணிகள் கடுமையாக மோதி வருகின்றன. மேலும் நாளை மேற்கு இந்திய தீவுகள் – நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி மிக முக்கியமானதாகும். தற்போது வரை ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மட்டுமே தகுதிபெற்றுள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.