ஈஷா மின் தகன மேடைக்கு எதிராக வழக்கு – ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

சென்னை: ஈஷா அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியி்ல் கட்டப்பட்டுள்ள மின் தகன மேடையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியில் கால பைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ”குடியிருப்பு பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் நிறைந்துள்ள இக்கரை போளுவாம்பட்டியில் ஈஷா யோகா மையம் சார்பில் கட்டப்பட்டுள்ள இந்த தகன மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஈஷா யோகா மையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “தகன மேடை அமைய உள்ள பகுதிக்கு அருகில் வசிப்பதாகக் கூறியுள்ள மனுதாரர், இருட்டுப்பள்ளம் எனும் பகுதியில் வசித்து வருகிறார். மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் முகவரியில் ஒரு மேற்கூரை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அங்கு எந்த குடியிருப்புகளும் இல்லை. மனுதாரர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அவரது மனைவி அரசு ஊழியராக உள்ளார். இவர்கள் போலியான முகவரியை சமர்ப்பித்துள்ளனர்.

மனுதாரர் கூறுவது போல அங்குள்ள தகன மேடையால் எந்தவொரு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படவில்லை. முறையாக அனுமதி பெற்றே அங்கு தகன மேடை அமைக்கப்பட்டுள்ள நிலையில், உள் நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கோரினார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘கால பைரவர் என்ற பெயரில் போளுவாம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள மின் தகன மேடையால் அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் தகன மேடை அமைக்கும் முன்பாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் ஆட்சேபத்தைக் கோராமல் தகன மேடை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த மின் தகன மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “கிராம மக்களின் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ள அந்தத் தகன மேடை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அங்கு நவீன முறையில் எல்பிஜி எரிவாயு மூலமாக உடல்கள் எரியூட்டப்படவுள்ளது. அதிக உயரத்தில் புகைபோக்கி அமைக்கப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அந்த தகன மேடையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 26-க்கு தள்ளி வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.