தடை மேல் தடை… சோதனைகளை சாதனையாக்கி உணவுத் தொழிலில் ஜெயித்த கரூர் நாகப்பன்!

விவசாயம், தனியார் கம்பெனியில் கேட்டரிங் கான்ட்ராக்ட், செயின் கம்பெனிக்கு லேபரை அனுப்பும் நிறுவனம், மொத்தமாக சிமெண்ட் விற்பனை என்று கரூர் நாகப்பன் ‘சகலகலா வல்லவனாக’ பல தொழில்களை நடத்தியவர்.

இப்படி அடுத்தடுத்து பல தொழில்களைப் பார்த்து வந்த அவர் கடைசியாக, ‘வண்டிக்கடை உணவகம்’ என்ற பெயரில் உணவகத் தொழிலில் குதித்தார். ஆனால், ஏற்கெனவே ஹோட்டல் தொழிலில் கரை கண்ட புள்ளிகள் நெருக்கடி தர, அத்தனை தடைகளையும் தனது விடாமுயற்சியால் தாண்டி தற்போது இரண்டு இடங்களில் உணவகம் நடத்தும் அளவுக்கு இந்த தொழிலில் முன்னேறி இருக்கிறார் நாகப்பன்.

வண்டிக்கடை உணவகம்

கரூர் மாவட்டம், தாழைப்பட்டிதான் நாகப்பனுக்கு பூர்வீகம். தற்போது குடும்பத்தோடு தான்தோன்றிமலையில் வசித்து வருகிறார். ‘வண்டிக்கடை உணவகம்’ என்கிற பெயரில் கரூர் சின்னாண்டாங்கோயில் சாலை, லைட்ஹவுஸ் பகுதி என இரண்டு இடங்களில் இரவு நேர உணகத்தை வெற்றிக்கரமாக நடத்தி வருகிறார். இந்தத் தொழிலில் அவர் வெற்றி அடைந்த கதையைக் கேட்டோம். உணவக வேலைகளுக்கு இடையில் ஆர்வமாக நம்மிடம் தனது வெற்றிக்கதையைப் பகிர்ந்துகொண்டார்.

“எனக்கு இப்போது 60 வயசாகுது. பன்னிரெண்டாவது வரை படித்திருக்கிறேன். ஊர்ல எங்களுக்கு இருக்கும் 7 ஏக்கர் நிலத்தில் ஆரம்ப காலத்தில் விவசாயம் பார்த்துக்கிட்டு இருந்தேன். அதன்பிறகு, தண்ணீர் பிரச்னை வரவும், மாற்றுத்தொழிலுக்கு மாற வேண்டிய சூழல்.

நாகப்பன்

அதன்பிறகு, வி.எம்.என் என்ற பெயரில் சிமெண்டை மொத்தமாக விற்பனை செய்யும் தொழிலை நடத்தினேன். பத்து வருஷத்துக்கு மேல நடத்தினேன். அந்தத் தொழிலை சில காரணங்களாக கைவிட வேண்டியிருந்துச்சு.

2000-ம் வருஷம் கரூர்ல உள்ள ஒரு தனியார் கம்பெனியில கேன்டீனை லீஸூக்கு எடுத்து நடத்தினேன். இதனால் சமையல் கலையைக் கொஞ்சம் கத்துக்கிட்டேன். அந்த வருமானம் போதவில்லை. அதனால், செயின் கம்பெனி ஒன்றுக்கு லேபர்களை அனுப்பும் நிறுவனத்தைத் தொடங்கினேன். தனியார் கம்பெனியில் நடத்தி வந்த கேன்டீனை கடந்த 2010 – ம் வருடம் வரை நடத்தினேன்.

எனக்கு இரண்டு பசங்க, ஒரு பெண் என்று மூன்று குழந்தைக. இன்ஜினீயரிங் முடிச்சுட்டு வேலையில் இருந்த என் பையன் பிரகாஷ், கரூர்ல உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டிருக்கிறான். டிபன் சரியில்லை. அப்போது அவனுக்கு, ‘கரூர்ல விலை குறைவாக, தரமா சாப்பிட நல்ல சைவ ஹோட்டல் இல்லையே…ஹேங்கவுட் ஸ்பாட்டும் இல்லை’ என்று நினைச்சதோடு, என்னிடம் ‘ஹோட்டல் ஆரம்பிங்களேன்’ என்று சொன்னான். ஏற்கெனவே, எனக்கு கேட்டரிங் சர்வீஸ் நடத்திய அனுபவம் இருந்ததால், கடந்த 2020 -ம் வருஷம் சிம்பிளாக தொடங்கினேன். டாடா ஏஸ் வண்டி ஒன்றை பழைய விலைக்கு வாங்கி அதிலேயே அடுப்பு, பாத்திரங்கள் வைப்பது, குடிநீர், கைகழுவ பைப் என்று மாற்றி அமைத்தேன். காலை, இரவு நேரத்தில் டிபன் மட்டும் தர நினைத்தேன்.

வண்டிக்கடை உணவகம்

கோவை சாலையில் உள்ள எல்.ஜி.பி பெட்ரோல் பங்க் அருகில் வண்டியை நிறுத்தி தினமும் விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். மல்லி, புதினா, கம்பு, மில்லட், சிறுதானியம், பூண்டு தோசைகள், இட்லி, பனியாரம், சப்பாத்தி, பரோட்டா என்று சுவையாக டிபன்களை வழங்கியதால், சில நாள்களிலேயே என்னோட டிபன் கடை வியாபாராம் வாடிக்கையாளர்கள் தயவுல சூடுப்பிடிக்க ஆரம்பிச்சுது.

ஆனா, கரூர்ல இதே தொழிலில் உள்ள சில பெரிய ஹோட்டல் நிர்வாகிகள், தங்களுக்கு வியாபாரம் பாதிப்பதாக எனக்குப் பல்வேறு வகையில் இடையூறு கொடுத்தாங்க. இதனால முதல் ஆறு மாதம் 10 இடங்களில் மாத்தி மாத்தி கடையைப் போட வேண்டிய சூழல்.

இந்த நிலையில, எல்.ஜி.பி பெட்ரோல் பங்க் அருகில் நாங்க மூணு நாள் தொடர்ந்து கடை போடலை. இதனால், அதன் எதிரே இருந்த பில்டிங் ஓனர் எனக்கு போன் பண்ணி, காரணம் கேட்டார். நான் விஷயத்தை சொன்னதும், ‘என் பில்டிங்குக்கு முன்னால கடை போட்டுக்குங்க’ என்று சொன்னார். அங்க பத்து நாள் கடை போட்டோம். ஆனா, அந்த பில்டிங்கில் இருந்த செல்போன் ஷோரூம்காரங்களுக்கு நாங்க கடை போடுறது இடைஞ்சலாக இருப்பதை நானே உணர்ந்ததால், அதே சாலையில் மேற்கே உள்ள சென்னை சில்க்ஸ் அருகில் கடையை மாத்தினோம். ஆனா, ‘விடாது கருப்பு’ங்கிற மாதிரி, சில ஹோட்டல் நிர்வாகங்ககிட்ட இருந்து தொடர் எதிர்ப்பு வந்துச்சு.

வண்டிக்கடை உணவகம்

அதனால, அங்கிருந்து கடையை மாத்தி, ஏ.கே.சி பெட்ரோல் பங்க் அருகில் மூணு நாள் கடையைப் போட்டேன். ஆனால், ஒரு ஹோட்டல்காரங்க லாயர் ஒருவரை வைத்து மிரட்டினாங்க. இதனால ‘தொழிலையே விட்டுறலாமா’ங்கிற அளவுக்கு வெறுப்பா போச்சு. ஆனா, கஸ்டமர்கள் வலியுறுத்துனதால, தொழிலைத் தொடர்ந்து செய்ய முடிவெடுத்தோம்.

மதுரை பைபாஸில் உள்ள காட்டுப்பகுதியில் நிறுத்தி மூணு நாள் கடையைப் போட்டோம். இன்னொரு பக்கம், வேறு இடம் தேடிக்கிட்டு இருந்தோம். அப்போதான், இப்போது கடை போட்டிருக்கிற சின்னாண்டாங்கோயில் சாலை அருகே உள்ள இந்த இடம் வாடகைக்குக் கிடைச்சது. இங்க கடையை ஆரம்பிச்சோம். முதல்ல தெற்குப் பக்கம் ஒன்றரை வருஷம் கடை போட்டோம். அதன்பிறகு, கொஞ்சம் வடக்குப்பக்கம் தள்ளி இந்த கடையைப் போட்டிருக்கிறோம்.

இந்தக் கடை பிஸினஸ் கைகொடுத்ததால, தொடர்ந்து, இன்னொரு பிராஞ்ச் ஆரம்பிக்கலாம்னு நினைச்சு அதுக்கு இடம் தேடினேன். அப்போதுதான், லைட்ஹவுஸ் பகுதியில் இடம் கிடைச்சது. அந்த இடத்தைக் கொடுத்தது, ஏற்கெனவே எல்.ஜி.பி பெட்ரோல் பங்க் அருகே கடை போட்டப்ப ஹோட்டல் நிர்வாகத்தால் பிரச்னை வந்தபோது, தனது பில்டிங் முன்பு கடை போட அனுமதித்த அந்த பில்டிங் ஓனர்தான்.

நம்ம முன்னேற்றத்தை தடுக்க ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால், நமக்கு கைகொடுக்க ஒரு நபர் இருந்தா போதும்… நமக்குள் ஏற்பட்ற வைராக்கியத்தால அத்தனை தடைகளையும் உடைத்து முன்னேற முடியும்னு அந்த நொடியில் உணர்ந்தேன். இரண்டு இடத்திலும் பிஸினஸ் இப்போ நல்லா போகுது.

வண்டிக்கடை உணவகம்

இப்போ இரண்டு கடைகளிலும் தலா ஆறு பேர்கள் வேலை பார்க்கிறாங்க. இப்ப இரவு டிபன் மட்டும் கொடுக்கிறோம். தான்தோன்றிமலை குடோனில் வைத்து உணவுப் பொருள்களுக்குரிய மாவு, சட்னி, சாம்பார் உள்ளிட்டவற்றைத் தயாரிப்போம். அதற்கு, என் மனைவி மற்றும் மூன்று பெண் ஊழியர்கள் ஈடுபடுறாங்க. மாலை 6 மணிக்கு இரண்டு இடத்துக்கும் பிரத்யேகமாக மாற்றப்பட்ட இரண்டு டாடா ஏஸ் வண்டிகளில் எல்லா பொருள்களையும் ஏத்திக்கிட்டு இரண்டு இடங்களிலும் போய் நிறுத்திவிடுவோம். இரவு 11 மணி வரைக்கும் வியாபாரம் நடக்கும். வீட்ல உணவு தயார் செய்ற மாதிரி தரமாகவும், சுவையாகவும் அனைத்து டிபன்களையும் தருவது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

என் மகன் பிரகாஷ் இரவு நேரத்தில் வேலை முடிந்து வந்தபிறகு உதவியா இருப்பார். இந்த உணவகங்களுக்கு, ‘வண்டிக்கடை உணவகம்’ என்று பெயர் வச்சோம். டிபனில் இன்னும் வெரைட்டி காட்ட நினைத்து பனங்கிழங்கு சப்பாத்தி, எங்க கடை டிஷ்ஷான சைவக்கொத்து பரோட்டா, அவிச்ச முட்டை தோசை (இது எங்க வண்டிக்கடை கண்டுப்பிடிச்ச டிஷ்), பீர்க்கங்காய் தோசை, கறிவேப்பிலை தோசைனு ஏகப்பட்ட வகைகளை அறிமுகப்படுத்தினோம்.

அதே போல, சாம்பார், கார சட்னி, தேங்காய் சட்னி, புதினா சட்னி, பீட்ருட் சட்னி, மல்லி, கடலை என்று மாறி மாறி பலவகை சட்னிகளை தர ஆரம்பிச்சோம். அதோடு, குருமா, நாட்டுவாழை அல்வா ஆகியவையும் கஸ்டமர்களுக்குக் கொடுத்துட்டு வர்றோம். இரண்டு இடத்திலும் இரண்டு கன்டெய்னர் லாரி பகுதிகளை வாங்கி, அதுல மூணு பக்கமும் ஓப்பனாக்கி, அதில் கடை நடத்துகிறோம்.

வண்டிக்கடை உணவகம்

இங்க மட்டும் கடை போடாம கஸ்டமர்கள் பர்த்டே பார்ட்டி, வீடு கிரகபிரவேஷம் போன்ற வீட்டு விசேஷங்களுக்கு ஆர்டர் கொடுத்தா, எங்க வண்டியோட போய் அவங்க இடங்கள்ல நிறுத்தி உணவு வழங்கி வருகிறோம். அதோடு, உணவு ஆப்களில் வைத்தும், இல்லங்களுக்கு எங்க ஊழியர்கள் மூலம் நேரடியாகவும் கஸ்டமர்கள் ஆர்டர் செய்யும் உணவுகளை டோர் டெலிவரி செய்கிறோம்.

பேங்க் ஊழியர்கள், மருத்துவர்கள், குடும்பம் சகிதமாக வருபவர்கள் என்று பல தரப்பு மக்களும் எங்க கடைக்கு சாப்பிட வர்றாங்க. 600 ரெகுலர் கஸ்டமர்கள் வரை இருக்காங்க. தரமான எண்ணெய், உணவுப்பொருள்களை சமையலில் பயன்படுத்து கிறோம்.

எங்களுக்கு ஊரில் இருக்கும் இரண்டரை ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் காய்கறி, வெங்காயத்தை விளைவிக்கிறேன். அதைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துகிறேன். அதே போல, எங்க கடை ஊழியர்களுக்கு விபத்துக் காப்பீடு பண்ணிக் கொடுத்திருக்கிறேன்.

எங்கத் தொழிலுக்கு ஆரம்பத்துல சிலர் பல்வேறு வகையில் முட்டுக்கட்டை போட நினைத்து குடைச்சல் கொடுத்தது ஒரு பக்கம் எனில், எங்க முன்னேற்றத்தைப் பார்த்து இதுபோல் டிபன் கடை தொடங்க ஆசைப்பட்டு ஏமாந்தவங்க சிலர். எங்களைப் பார்த்து தொழில் தொடங்க நினைச்சவங்க நேரடியாக வந்து என்னிடம் ஐடியா கேட்காம, ‘யூடியூப்ல இருந்து வர்றோம். உங்க கடையை சூட் பண்ணி, ஃபேமஸ் ஆக்குறோம்’ என்று சொல்லி நான்கு பேர் தனித்தனியா எங்க கடையை சூட் பண்ற மாதிரி பாவ்லா பண்ணி, எங்க கடை செட்டப், உணவுமுறைகளை போட்டோ, வீடியோவாக எடுத்துட்டுப் போனாங்க. ஆனா, எந்த யூடிபூப்லயும் அது வரலை. அப்புறம்தான் தெரிஞ்சது, அந்த நாலு பேரும் எங்களைப் போல டிபன் கடை ஆரம்பிக்க எங்களோட கடை செட்டப்பை நூதனமாக வீடியோ எடுத்துட்டுப் போய் பார்க்க அப்படி பண்ணியிருக்காங்க என்பது.

வண்டிக்கடை உணவகம்

ஆனா, அவங்க எங்களைப் போல மொபைல் ஹோட்டல் ஆரம்பிச்சு, ஃபெயிலியராகி கடைசியில் பிஸினஸை இழுத்து மூடிட்டாங்க. எங்ககிட்ட உண்மையைச் சொல்லிக் கேட்டிருந்தால, நாங்களே அவங்களுக்குத் தொழில் நுணுக்கங்களைக் கத்துக் கொடுத்திருப்போம்.

அடுத்து, காந்தி கிராமம் பகுதியில கேட்டரிங் முடிச்சவங்களை வைத்து ஹோட்டல் மாதிரி தொடங்கலாம் என்கிற ஐடியா இருக்கு. அதே போல, மதிய நேரத்துல வாரத்துல 7 நாட்களும் கலவை சாதம் மாதிரி ரெடி செய்து விற்பனை செய்யலாம் என்று இருக்கிறோம்.

உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தடைகள் வரலாம். உங்க முயற்சி, உழைப்பு உண்மையாக / உறுதியாக இருந்தால், எல்லா தடைகளையும் தகர்த்துவிட்டு நீங்க எடுக்கிற முயற்சியில் வெற்றி பெறலாம். அதற்கு நானே உதாரணம்” என்றார் முத்தாய்ப்பாக…!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.