குவைத் தீ விபத்து நிகழ்ந்த கட்டிடத்தில் தங்கியிருந்த பேராவூரணி இளைஞர் மாயம்: உறவினர்கள் கவலை

தஞ்சாவூர்: குவைத் நாட்டில் தீ விபத்து நிகழ்ந்த கட்டிடத்தில் தங்கி இருந்த பேராவூரணி இளைஞர் குறித்து இதுவரை எந்தத் தகவலும் தெரியாததால் பெற்றோரும் உறவினர்களும் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஆர்.மனோகர். இவரது மனைவி லதா. இவர்களது மகன் புனாஃப் ரிச்சர்ட் ராய் (28). ரிச்சர்ட் ராய் கடந்த 2019 முதல் குவைத்தில் நாட்டில் மங்கஃப் என்ற இடத்தில் தனியார் கட்டுமானப் கம்பெனியில் குவாலிட்டி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் தனது புதிய வீடு புதுமனை புகுவிழாவில் கலந்து கொள்ள சொந்த ஊர் திரும்பிய ரிச்சர்ட் ராய், ஒன்றரை மாதம் சொந்த ஊரில் இருந்து விட்டு கடந்த ஏப்ரல் மாதம் குவைத் திரும்பினார்.

இந்நிலையில், குவைத் நாட்டில் புதன்கிழமை அதிகாலை நடந்த தீ விபத்தில் ஒரே கட்டிடத்தில் தங்கி இருந்த 150-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இதில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே கட்டிடத்தில் தங்கி இருந்த புனாஃப் ரிச்சர்ட் ராய் குறித்த விவரங்கள் ஏதும் இதுவரை தெரியவில்லை. அவருடைய செல்போன் எண்ணுக்கு பெற்றோர் தொடர்பு கொண்டபோது அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.

அந்தக் கட்டிடத்தில் தங்கியிருந்த ரிச்சர்ட் ராயின் நண்பர்களிடம் கேட்டபோது அவர்களுக்கும் எந்தத் தகவலும் தெரியவில்லை. தங்களது மகன் புனாஃப் ரிச்சர்ட் ராய் குறித்த எந்த தகவலும் தெரியாததால் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தங்கள் மகன் குறித்த தகவலை தெரியாமல் தவித்து வரும் அவர்கள் தங்கள் மகனை பத்திரமாக மீட்டுத் தரும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.