விழுப்புரம்: விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவியில் இருந்து கடந்த 11-ம் தேதி அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக, மாவட்ட அவைத்தலைவராக இருந்த டாக்டர் சேகர் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அமைச்சர் பொன்முடியின் மகனான கௌதம சிகாமணி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், விக்கிவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து திமுக சார்பில் விக்கிரவாண்டி தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான க.பொன்முடி, கொள்கைப் பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.லட்சுமணனும் இடம்பெற்றுள்ளனர். ஆனால் முன்னாள் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான செஞ்சி கே.எஸ். மஸ்தான் இக்குழுவில் இடம்பெறவில்லை.
திமுக திட்டமிட்டு மஸ்தானை ஓரங்கட்டுகிறதா என்று விழுப்புரம் திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, “குவைத் நாட்டின் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து தமிழர்கள் இறந்துவிட்டதாக அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தகவல்களை சேகரித்து அடுத்தகட்ட நிவாரணப் பணிகளை கவனிக்க வேண்டிய இடத்தில் அமைச்சர் இருப்பதால் அவர் இக்குழுவில் இடம்பெறவில்லை. மற்றபடி வேறு எக்காரணமும் இல்லை” என்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடி தரப்பும் மஸ்தான் தரப்பும் தனி ஆவர்த்தனம் நடத்துவதாக ஏற்கெனவே செய்திகள் உண்டு. இந்த நிலையில் அமைச்சர் மஸ்தானிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருப்பதும் பொன்முடியின் மகனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதும் திமுகவுக்குள் பல்வேறு விவாதங்களை கிளப்பி இருக்கிறது.