இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவித் தொகை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.20 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், மற்ற நகரங்களில் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் நல நிதிச்சட்டத்தை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமல்படுத்தும்படி உத்தரவிடக் கோரி புதுச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஃபரிதா பேகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “வழக்கறிஞர்கள் நல நிதியத் திட்டத்தின் கீழ் இளம் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரித்து வழங்குவது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், புதுச்சேரி அரசு மற்றும் புதுச்சேரி – காரைக்கால் வழக்கறிஞர்கள் சங்கங்களுடன் இணைந்து கலந்தாலோசித்து கருத்துருக்களை இறுதி செய்ய வேண்டும்.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு குறிப்பாக, சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரத்தையும், மற்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.15 ஆயிரத்தை மூத்த வழக்கறிஞர்கள் வழங்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நான்கு வாரங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். இளம் வழக்கறிஞர்களுக்கான உதவித் தொகையை எந்தவொரு பாரபட்சமும் இல்லாமல் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.