குவைத் தீ விபத்து: திருச்சியை சேர்ந்தவரின் நிலையை அறிய முடியாமல் குடும்பத்தினர் தவிப்பு

திருச்சி: குவைத் நாட்டில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், விபத்துக்குள்ளான கட்டிடத்தில் தங்கியிருந்த திருச்சியைச் சேர்ந்த நபரின் நிலையை அறிய முடியாமல், அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

திருச்சி, மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் எபிநேசர். துப்பாக்கித் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மூத்த மகன் ராஜூ (54). இவர் திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் குவைத் நாட்டில் உள்ள மங்கஃப் பகுதியில் என்பிடிசி நிறுவனத்தில் கடந்த 12 ஆண்டுகளாக கண்டெய்னர் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், குணசீலன், சம்பத்குமார் என்ற மகன்களும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.

குவைத் நாட்டின் அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து ராஜூ, தீ விபத்தில் படுகாயம் அடைந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்துள்ளது. இதனால், அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “வரும் ஜூலை மாதம் 6-ம் தேதி ராஜூ தனது வேலையை விட்டு விட்டு தமிழகம் திரும்பி, தனது குடும்பத்தாருடன் வாழ திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர். இதில், ராஜூவின் நிலை என்ன? என்பது குறித்து முழுமையாக தெரியவில்லை. இந்த தீ விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஐந்திலிருந்து ஏழாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எங்களுக்கு பெரும் கவலையாக உள்ளது,” என்றனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் ராஜூவும் ஒருவர் என்றும் தகவல்கள் வருகின்றன. இதனால் ராஜூவின் குடும்பத்தினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். தனது தந்தையின் நிலை குறித்து தெரிவிக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமாரிடம் ராஜூவின் மகன் குணசீலன் வியாழக்கிழமை மனு ஒன்றையும் அளித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.