விராட் கோலி டி20 உலக கோப்பை தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் சிறப்பாக ஆடவில்லை என்பதால் அவர் மீது விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடி ஆரஞ்சு தொப்பியை எல்லாம் வென்ற அவர், இந்திய அணிக்காக அதுவும் உலக கோப்பையில் 1, 4, 0 என ரன்கள் எடுப்பது எந்தவகையில் நியாயம் என விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. இந்திய அணி டி20 உலக கோப்பையில் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் விராட் கோலியின் பங்களிப்பு சுத்தமாக இல்லை. 11 பேர் கொண்ட அணியாக இருந்தாலும், 10 பேர் கொண்ட அணியாகவே விளையாடி இந்த போட்டிகளில் வென்றிருக்கிறார்கள். அதனால் விராட் கோலி ஓப்பனிங் இறங்குவதற்கு பதிலாக, வழக்கம்போல் நம்பர் 3 ஸ்லாட்டில் விளையாட வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் எல்லாம் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு வாசிம் ஜாபர் பதிலடி கொடுத்துள்ளார். விராட் கோலியின் பார்ம் குறித்து விமர்சிப்பவர்களுக்கு அவர் கொடுத்திருக்கும் பதிலில், விராட் எப்படியான பிளேயர் என எல்லோருக்கும் தெரியும். அதனால் ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடவில்லை என்பதற்காக எல்லாம் அவரை விமர்சிப்பத்தில் நியாயமில்லை. இந்திய அணிக்காக பல போட்டிகளை தனி ஒருவராக களத்தில் நின்று வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த கடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை, விராட் கோலியை விமர்சிப்பர்கள் மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்.
அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்தபோது, யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் ஹரீஸ் ராப் ஓவரில் சிக்சர்களை அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தவர் அவர். இந்திய அணிக்கு தேவைப்படும் நேரத்தில் சரியான ஆட்டத்தை விராட் கோலி கொடுப்பார். மிகப்பெரிய போட்டிகளின் போதெல்லாம் விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாகவே இருந்திருக்கிறது என்பதால், டி20 உலக கோப்பை குரூப் 8 சுற்றிலும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்று வாசிம் ஜாபர் புகழாரம் சூட்டியிருக்கிறார். அதாவது, விராட் கோலியை ஒரு பாகுபலி ரேஞ்சுக்கு பெருமையாக பேசியிருக்கிறார்.
டி20 உலக கோப்பை தொடரைப் பொறுத்தவரை இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று குரூப் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. லீக் போட்டியில் அடுத்ததாக கனடா அணியுடன் மோத இருக்கிறது.