புதுடெல்லி,
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளை (அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா அணிகளுக்கு எதிராக) ருசித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் நடக்க உள்ளன.
இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினாலும், அதில் அர்ஷ்தீப் சிங் இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
அர்ஷ்தீப் சிங் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடைசி ஓவரை வீசிய விதம் மற்றும் பல்வேறு இடங்களில் நடந்த 20 ஓவர் போட்டிகளில் பந்து வீசியதை பார்க்கும் போது, அவர் முகமது சிராஜை விட சிறப்பாக செயல்படுகிறார்.
வெஸ்ட் இண்டீசில் உள்ள ஆடுகளத்தின் தன்மையை கருத்தில் கொண்டு சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் 2 சிறப்பு வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஆடும் முடிவை மேற்கொண்டால் முகமது சிராஜை விடுத்து அர்ஷ்தீப் சிங் அணியில் தொடர வேண்டும்.
ஏனெனில் இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அவரால் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் அர்ஷ்தீப் சிங் இதுவரை 7 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். முகமது சிராஜ் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றி உள்ளார்.