திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேரி இம்மாகுலேட் தனியார் பள்ளியில் சிறுத்தை ஒன்று இன்று மாலை 4 மணி அளவில் புகுந்துள்ளது. இதனை கண்ட பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை பத்திரமாக வகுப்பறைக்குள் வைத்து பூட்டினர். பிறகு சிறுத்தை பள்ளிக்கு அருகாமையில் உள்ள கார் நிறுத்துமிடத்திற்கு செல்லும் போது 70 வயது முதியவர் (வாட்ச் மேன்) ஒருவரை கடித்து படுகாயம் ஏற்படுத்தியது. சிறுத்தை கார் நிறுத்தும் இடத்திற்கு சென்றதும் மாணவர்கள் பத்திரமாக அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
படுகாயம் அடைத்த முதியவரை மீட்டு பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் காவல்துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சிறுத்தை கார் நிறுத்துமிடத்திற்கு சென்றதை அறிந்த வனத்துறையினர் அந்த இடத்தை லாவகமாக பூட்டினர். ஆனால் துரதிஷ்டவசமாக கார் நிறுத்துமிடத்தில் 4 பேர் காரில் மாட்டிக்கொண்டனர். காரில் மாட்டிக்கொண்டவர்களிடம் வனத்துறையினர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் ட்ரோன் உதவியுடனும் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
அருகாமையில் உள்ள குடியிருப்புகளுக்கு சிறுத்தை செல்லாமல் இருக்க காவல்துறையினர் மக்களை பாதுகாப்பாக அவரவர் வீட்டில் பத்திரமாக இருக்குமாறு தகவல் தெரிவித்து வருகின்றனர். சிறுத்தையை பாதுகாப்பாக மயக்க ஊசி கொடுத்து பிடிக்க ஓசூர் மற்றும் சேலத்தில் இருந்து வனத்துறையினர் வர வைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “சிறுத்தையை பத்திரமாக மயக்க ஊசி கொடுத்து பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. படுகாயம் அடைந்த முதியவருக்கு (வாட்ச் மேன்) அரசு சார்பில் அனைத்து வகையான உதவிகளும் செய்து தரப்படும். சிறுத்தை எங்கிருந்து வந்திருக்கிறது என்பது குறித்து பிறகு ஆய்வு செய்யப்படும்” என்று கூறினார்.