சாதி மறுப்பு திருமணம்: நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறை

திருநெல்வேலி: திருநெல்வேலியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், கட்சி அலுவலக கண்ணாடி, நாற்காலிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி – பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி (23) என்பவருக்கும், பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (28) என்பவருக்கும் நேற்று முன்தினம் பாளையங்கோட்டையில் கலப்பு திருமணம் நடைபெற்றது. இதற்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தனது மகளை காணவில்லை என்று பெண் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். பாளையங்கோட்டையில் ரெட்டியார்பட்டி சாலையிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் இருப்பதாக பெண் வீட்டாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெண்ணின் உறவினர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். பெண்ணை அழைத்தபோது, அவர் வர மறுத்ததால் கட்சி நிர்வாகிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் ரகளையில் ஈடுபட்டு கட்சி அலுவலக கண்ணாடிகளையும், நாற்காலிகளையும் உடைத்ததுடன், கட்சி நிர்வாகிகளையும் தாக்கியுள்ளனர். இதில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அருள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் கே. பழனி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் ஆதர்ஷ் பசேரா சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக பெருமாள்புரம் போலீஸார் வழக்கு பதிந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.