புதுடெல்லி/ குவைத் சிட்டி: குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தமிழர்கள் உட்பட 41 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்களின் உடல்களை தாயகம்கொண்டுவர விமானப் படை விமானம் குவைத் விரைந்துள்ளது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்காஃப் நகரில் 7 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். ஒரே நிறுவனத்தை சேர்ந்த இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள்.
இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் சமையல் அறையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் திடீரென தீப்பற்றியது. கட்டிடம் முழுவதும் மளமளவென தீ பரவியதில் 49 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 41 பேர் இந்தியர்கள். இவர்கள் அனைவரும் 20-50 வயதினர். 24 பேர்கேரளாவை சேர்ந்தவர்கள். இதில்தமிழகத்தை சேர்ந்த 7 பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்தது. பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் கருகியுள்ளன. விபத்தில் காயம் அடைந்தவர்கள் 5 அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து பகுதி மற்றும் மருத்துவமனைக்கு குவைத்தில் உள்ள இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா உடனடியாக சென்று பார்வையிட்டார்.
தீ விபத்தில் இறந்த இந்தியர்களின் உடல்களை தாயகம் கொண்டுவர இந்திய விமானப் படை விமானம் குவைத் சென்றடைந்தது.
இதுகுறித்து டெல்லியில் நேற்று அதிகாரிகள் கூறும்போது, “தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை குவைத் அதிகாரிகள் டிஎன்ஏ பரிசோதனை செய்து வருகின்றனர். அவர்களது உடல்களை தாயகம் கொண்டுவர இந்திய விமானப் படை விமானம் அங்கு தயார் நிலையில் உள்ளது” என்றனர்.
தொலைபேசி எண் அறிவிப்பு: விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் 965 – 65505246 என்ற தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.
இந்நிலையில், மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்திவர்தன் நேற்று குவைத் சென்றடைந்தார். காயம் அடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதர மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.
உயிரிழந்த கேரள தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், குவைத் செல்கிறார்.
உயிரிழந்த கேரள தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பிரபல தொழிலதிபர்கள் எம்.ஏ. யூசூப் அலி, ரவி பிள்ளை ஆகியோர் முறையே ரூ.5 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக கேரள முதல்வரிடம் உறுதி அளித்துள்ளனர்.
7 தமிழர்களின் குடும்பத்துக்குரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
தீ விபத்து குறித்து வேதனை தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் நேரிட்ட தீ விபத்தில் தூத்துக்குடி மாரியப்பன், திருச்சி ராஜு, கடலூர் சின்னதுரை, சென்னை சிவசங்கர், தஞ்சை ரிச்சர்ட் ராய், ராமநாதபுரம் ராமு, விழுப்புரம் முகமது ஷெரீப் ஆகியோர் இறந்த தகவல் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.