டி20உலக கோப்பை : பாகிஸ்தான் அணியை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! மியாமி டூ கராச்சி பிளைட் ரெடியா?

டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குரூப்8 சுற்றுக்கு தகுதிபெறவில்லை. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவிய அந்த அணி அமெரிக்காவிடமும் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இதனால், அந்த அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அயர்லாந்து – அமெரிக்கா இடையிலான போட்டி முடிவை பாகிஸ்தான் அணி எதிர்நோக்கி இருந்தது. அப்போட்டியில் அயர்லாந்து அணி ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால், அடுத்த லீக் போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி குரூப் 8 சுற்றுக்கு முன்னேறலாம் என இளவுகாத்த கிளி போல் காத்துக் கொண்டிருந்தது. ஆனால் வருண பகவான் அதற்கு வழிவிடவில்லை.

தாயகம் திரும்பும் பாகிஸ்தான்

அமெரிக்கா – அயர்லாந்து அணிகளுக்கு இடையே புளோரிடாவில் நடைபெற இருந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கு புள்ளிகள் சரிசமமாக பிரித்துக் கொடுக்கப்பட்டது. இதனடிப்படையில், டி20 உலக கோப்பை குரூப் ஏ சுற்றில் 5 புள்ளிகளுடன் இந்தியாவுக்கு அடுத்த இடத்தை அமெரிக்கா அணி பிடித்துவிட்டது. வெறும் இரண்டு புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கும் பாகிஸ்தான் அணி, கடைசி லீக் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் கூட 4 புள்ளிகள் மட்டுமே பெற முடியும் என்பதால் குரூப் 8 சுற்றுக்கு முன்னேற வாய்ப்பில்லை. இதனால் பெரும் சோகத்துடன் தாயகம் திரும்ப தயாராகிவிட்டது பாகிஸ்தான் அணி.

பாபர் அசாம் மீது விமர்சனம்

அந்த அணியின் ஆட்டத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களே கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பாபர் அசாம் பேட்டிங் படுமோசமாக இருந்ததாக விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள், அவரை மீண்டும் டி20 அணிக்கு கேப்டனாக நியமித்ததே தவறு என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நிர்வாகிகளையும் வசைபாடி வருகின்றனர். பாபர் அசாமை நீக்கிவிட்டு தான் ஷாகீன் அப்ரிடி பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், மீண்டும் எந்த அடிப்படையில் அவரை கேப்டனாக நியமித்தீர்கள் என்றும் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதுஒருபுறம் இருக்க, இந்தியா மற்றும் அமெரிக்கா என இருநாட்டு ரசிகர்களும் சேர்ந்து பாகிஸ்தான் அணியை சோஷியல் மீடியாக்களில் கிண்டலடித்துக் கொண்டிருக்கின்றனர். மியாமி டூ கராச்சி பிளைட் எப்போது பாகிஸ்தான் அணி? என்று காமெடியாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.