சென்னை: சென்னை – நாகர்கோவில் தினசரி வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 20-ம் தேதி சென்னை வருகிறார்.
சென்னை ஐசிஎஃப்-ல் வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 26-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன.
தெற்கு ரயில்வே சார்பில் சென்னை – கோவை, சென்னை – மைசூரு, சென்னை – விஜயவாடா, திருவனந்தபுரம் – காசர்கோடு, எழும்பூர் – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், எழும்பூர் – நாகர்கோவில் இடையே வாராந்திர வந்தே பாரத் ரயில்சேவையும் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தெற்கு ரயில்வே நிர்வாகம், ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில், எழும்பூர்- நாகர்கோவில் இடையே தினசரி வந்தேபாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 20-ம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை ரயில்வே அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். எழும்பூர் ரயில் நிலையத்தில், விழா முன்னேற்பாடுகள் குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டு, ரயில்வே அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக மோடி 20-ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது,வந்தே பாரத் ரயில் சேவை மட்டுமின்றி வேறு சில பணிகளையும் தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் வருகையால் பாஜக நிர்வாகிகள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.