இத்தாலி: “இந்தியத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த ஜனநாயக உலகத்துக்கான வெற்றி” என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் இவிஎம் தொழில்நுட்பத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மை ஆகியனவற்றை சுட்டிக்காட்டிப் பாராட்டினார்.
50வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் உறுப்பு நாடுகளாக கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. இம்மாநாட்டை இத்தாலி நடத்துகிறது. அல்ஜீரியா, அர்ஜென்டினா, பிரேசில், இந்தியா, ஜோர்டான், கென்யா, துனிஷியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், உக்ரைன், மொரிட்டானியா, வாடிகன் சிட்டி ஆகிய நாடுகள் சிறப்பு அழைப்பாளர்களாக இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளன. ஆப்ரிக்க ஒன்றியத்துக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “தொழில்நுட்ப வளர்ச்சியானது ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். AI தொழில்நுட்பம் வெளிப்படைத்தன்மையுடனும், பாதுகாப்புடனும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறினார்.
ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு: இந்த மாநாட்டை ஒட்டி பிரதமர் மோடி இத்தாலி பிரதமர் மெலோனி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் கிஷிடா, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பலரையும் சந்தித்துள்ளனர்.
ஜெலன்ஸ்கியுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ள தமக்கு வாழ்த்து தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
இரு தலைவர்களும் நடத்திய பயனுள்ள பேச்சு வார்த்தையின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உக்ரைன் நிலவரம் குறித்தும், சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள அமைதிக்கான உச்சி மாநாடு குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
பேச்சுவார்த்தை மற்றும் ராஜிய ரீதியிலான நடைமுறைகள் மூலம் உக்ரைன் மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதை இந்தியா தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். அமைதித் தீர்வுக்கு தனது சக்திக்குட்பட்ட அனைத்து விஷயங்களையும் இந்தியா தொடர்ந்து செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதியளித்தார். இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக உலகத்துக்கான வெற்றி.. ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் அண்மையில் நடந்தது. விரைவில் பிரான்ஸ், பிரிட்டன, அமெரிக்கத் தேர்தல்கள் வரவுள்ளன. இதனை மேற்கோள்காட்டிப் பேசிய பிரதமர் மோடி, “இந்திய மக்கள் தேர்தலில் வரலாற்று வெற்றி கொடுத்துள்ளனர். அவர்கள் அளித்த அந்த ஆசிர்வாதம் ஜனநாயக உலகத்துக்கான வெற்றி. இவிஎம் தொழில்நுட்பத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மை பாராட்டுக்குரியவை” என்றார்.