NEET தேர்வு மோசடி: கேள்விகேட்கும் உச்ச நீதிமன்றம், மழுப்பும் NTA – சொதப்பும் மத்திய அரசு?!

2024 நீட் தேர்வில் தேசிய தேர்வு முகமையால் குறிப்பிட்ட மாணவங்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்தும், விருப்பப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில், கருணை மதிப்பெண் ரத்து, மறுதேர்வு நடத்தினால் மட்டும்போதாது வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இதற்கு தேசிய தேர்வு முகமை பதிலளிக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருப்பதால் விவகாரம் மேலும் சூடுபிடித்திருக்கிறது.

NEET

கடந்த மே மாதம் நடைபெற்ற 2024-ம் ஆண்டுக்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, மதிப்பெண் மோசடி, கருணை மதிப்பெண், ஒரே தேர்வு மையத்தில் எழுதியவர்கள் அடுத்தடுத்து ஒரே மதிப்பெண், அதிகபட்சமாக 67 பேர் முழுமதிப்பெண் பெற்று முதலிடம், முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியீடு என அடுக்கடுக்கானப் புகார்கள், சந்தேகம் எழுந்த நிலையில், விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. சுமார் 24 லட்சம் மாணவர்கள் எழுதியத் தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டிய மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் தரப்பில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட எதிர்க்கட்சிகள், கல்வி அமைப்புகள் கடுமையான போராட்டங்களை மாணவர்களுடன் இணைந்து நடத்தின.

இதையடுத்து, நீட் தேர்வு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “நீட் தேர்வின் புனிதமே பாதிக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு தேசிய தேர்வு முகமை உரிய பதில் அளிக்கவேண்டும்” என நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. அதேநேரம், “மருத்துவ கவுன்சிலிங் நடத்த தடைவில்லை; என்.டி.ஏ தொடரலாம்!” என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. இந்த விவகாரம் பூதாகரமாகியிருக்கும் நிலையில் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், “நீட் தேர்வில் எந்த ஊழலும் நடக்கவில்லை; வினாத்தாள் கசியவில்லை; கருணை மதிப்பெண் குறித்து விசாரிக்க குழு அமைத்திருக்கிறோம். குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் பதிலளிக்கத் தயாராக இருக்கிறோம்!” எனத் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றம்

அதன்பின்னர் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது. அந்த பதிலில், `கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களின் தேர்வு முடிவுகளை ரத்து செய்வதாகவும் அவர்களுக்கு மறுதேர்வு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும்’ உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பதிலளித்தது. தேசிய தேர்வு முகமையின் பதிலை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், “சர்ச்சைக்குரிய வகையில் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த வேண்டும். வரும் ஜூலை 6-ம் தேதி மருத்துவக் கவுன்சிலிங் தொடங்கவிருப்பதால், அதற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், வரும் ஜூன் 23-ம் தேதியே மறுதேர்வு நடத்தி, ஜூன் 30-ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். மேலும், மறுதேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்ணை நீக்கி, அவர்களின் அசல் மதிப்பெண்களை வெளியிட வேண்டும்’ என உத்தரவிட்டது.

சிபிஐ !

இந்த நிலையில், `நீட் தேர்வு விவகாரத்தில் கருணை மதிப்பெண் ரத்து செய்து, மறுதேர்வு நடத்தினால் மட்டும் போதாது 24 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருக்கிறது. எனவே இந்த விவகாரத்தை சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்’ எனக்கூறி பாதிக்கப்பட்டவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதையடுத்து, `நீட் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை மேற்கொள்வது குறித்து தேசிய தேர்வு முகமை இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்’ உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது.

நீட் தேர்வு முறைகேடு… மழுப்பும் மத்திய அரசு:

நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையும் மத்திய அரசும் மோசடியை மூடி மறைக்க முயற்சி செய்துவருதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “கல்வி அமைச்சர் மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் நீட் ஊழலை மூடி மறைக்க ஆரம்பித்துள்ளது மோடி அரசு. நீட் தேர்வில் வினாத்தாள் கசியவில்லை என்றால், பீகாரில் வினாத்தாள் கசிவு காரணமாக 13 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது ஏன்? பாட்னா காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு, (EOU) கல்வி மாஃபியாவுக்கு 30-50 லட்சம் செலுத்தி, ஏற்பாடு செய்யப்பட கும்பல் மூலம் வினாத்தாள் கைமாறியதை அம்பலப்படுத்தவில்லையா?

குஜராத்தின் கோத்ராவில் NEET-UG மோசடி வெடித்து, முறியடிக்கப்படவில்லையா? பயிற்சி மையம் நடத்தும் நபர், ஆசிரியர் மற்றும் மற்றொரு நபர் உட்பட 3 பேர் இதில் ஈடுபட்டுள்ளதாகவும், குஜராத் காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களிடையே 12 கோடி ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மோடி அரசின் கூற்றுப்படி, நீட் தேர்வில் எந்தத் வினாத்தாள்களும் கசியவில்லை என்றால், ஏன் இந்தக் கைதுகள் செய்யப்பட்டன? இதிலிருந்து என்ன முடிவு எடுக்கப்படுகிறது? மோடி அரசு நாட்டு மக்களை முட்டாளாக்க முயற்சி செய்ததா அல்லது இப்போது செய்ய முயற்சிக்கிறதா?” என சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மோடி – கார்கே

மேலும், “24 லட்சம் இளைஞர்களின் ஆசைகளை மோடி அரசு நசுக்கியுள்ளது. 24 லட்சம் இளைஞர்கள் நீட் தேர்வில் கலந்து கொண்டு மருத்துவர்களாக ஆவதற்காக, 1 லட்சம் மருத்துவ இடங்களுக்காக இரவு பகலாக கடுமையாக உழைக்கிறார்கள். இந்த 1 லட்சம் இடங்களில், 55,000 இடங்கள் SC, ST, OBC, EWS பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட அரசுக் கல்லூரிகளில் உள்ளன. இம்முறை, மோடி அரசு NTA-ஐ தவறாகப் பயன்படுத்தியதோடு, மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைகளில் பெருமளவில் மோசடி செய்துள்ளது, இதன் காரணமாக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான கட்-ஆஃப் அதிகரித்துள்ளது. மதிப்பெண்கள், வினாத்தாள்கள் கசிவுகள், மோசடிகள் போன்ற இவர்களுடைய முறைகேடுகளால், தகுதிவாய்ந்த, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சலுகைக் கட்டணத்தில் அரசு சேர்க்கை கிடைக்காமல் தடுக்கும் விளையாட்டாகவே தெரிகிறது” என குற்றம்சாட்டியிருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

அதேபோல தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், “கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதன் மூலம் சமீபத்திய நீட் தேர்வு முறைகேட்டில் இருந்து தப்பிக்க மத்திய அரசு முயற்சி செய்வது அவர்களின் திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும். மாநில அரசுகளின் உரிமையைப் பறித்த பிறகு, முறைகேடுகளின் மையமாக விளங்கும் பிரச்னைகள் மற்றும் ஒழுங்கற்ற முறையில் தேர்வுகளை நடத்துதல் போன்ற முக்கியப் பிரச்னைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்ப அனுமதிக்கக் கூடாது. மத்திய அரசின் திறமையின்மையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் வேதனையைப் பற்றியஅவர்களின் அக்கறையின்மையையும் கண்டிக்கும் அதே வேளையில், மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ நீட் தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை கூறியது. இந்த கருணை மதிப்பெண்கள் எப்படி வழங்கப்படுகிறது என்றால், உச்ச நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வந்த தீர்ப்பின் அடிப்படையில் வழங்கினோம் என்கிறார்கள். இதற்கு தேசிய தேர்வு முகமை ஆதாரமாக காட்டப்படும் தீர்ப்பு என்பது, 2018-ல் சி.எல்.ஏ.டி (Common Law Admission Test) என்று சொல்லக் கூடிய தேர்விற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பாகும். சி.எல்.ஏ.டி தேர்விற்கான தீர்ப்பை நீட் தேர்விற்கு பொருந்தும் வகையில் எடுத்துக் கொண்டு, கருணை மதிப்பெண் வழங்கியது மிகப்பெரும் மோசடி. கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இல்லை. ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மாநில மாணவர்களுக்குத்தான் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கலாம் என்ற தகவல், தேர்வு எழுதிய 24 லட்சம் மாணவர்களுக்கும் தெரியவில்லை. இது ஒட்டுமொத்த இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அநீதி!” எனக் கடுமையாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.