வெற்றிமாறன் தயாரிப்பில், செந்தில்குமார் இயக்கத்தில், சூரியின் நடிப்பில் வெளியான ‘கருடன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
‘விடுதலை’ திரைப்படத்திற்குப் பிறகு சூரி தொடர்ந்து கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கின்றார். அவ்வகையில் சூரி நடித்த இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னையில் ‘கருடன்’ படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், சூரியின் தொடர் வெற்றிக்கானக் காரணம் குறித்தும் ஓ.டி.டி குறித்தும் பேசியிருக்கிறார்.
இது குறித்துப் பேசியிருக்கும் வெற்றிமாறன், “கடந்த சில ஆண்டுகளாகவே ஓ.டி.டி-யை நம்பித்தான் திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. பெரிய லாபமின்றி படத்தைத் திரையரங்குகளில் திரையிட்டுவிட்டு, ஓ.டி.டி-க்கு நல்ல லாபத்திற்கு படத்தை விற்க வேண்டிய நிலைதான் இருந்தது. ஓ.டி.டி-யில் அவர்களுக்குத் தேவையானப் படத்தைத்தான் நல்ல விலைக்கு வாங்குவார்கள். சில படங்களை நல்ல விலைக்கு வாங்க மாட்டார்கள். ஓ.டி.டி-யில் படத்தை விற்பதிலும் இப்படிப் பல பிரச்னைகள் இருக்கின்றன.
ஓ.டி.டி-யை நம்பித்தான் சினிமா இருக்கிறது என்ற நிலையை சில திரைப்படங்கள் மாற்றித் திரையரங்குகளில் வெற்றி பெற்று வருகின்றன. பார்வையாளர்கள் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களைத் தொடர்ந்து வெற்றி பெறச் செய்துகொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் ‘கருடன்’ திரைப்படத்தின் வெற்றி முக்கியமானது. நல்ல திரைப்படங்கள் திரையரங்குகளில் நல்ல லாபத்தை ஈட்டும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. சசிகுமார் இப்படத்தில் நடிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், சூரிக்காக இப்படத்தில் நடித்தார். படத்தில் அவரின் கதாப்பாத்திரம் மிகப்பொருத்தமாகவும், சிறப்பாகவும் இருந்தது. அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.
‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பில் காயங்கள் ஏற்பட்டபோதிலும், தன்னுடைய முழு அர்பணிப்பைப் போட்டு நடித்தார் சூரி. அப்போதுதான் ‘கருடன்’ படத்திலும் நடித்தார். இரண்டு படத்திலும் காயங்களைப் பொருட்படுத்தாமல் முழு அர்பணிப்புடன் நடித்தார். தனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பைத் தவற விட்டுவிடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறார். சூரியின் அர்பணிப்புத்தான் அவரது வெற்றிக்குக் காரணம். கதாபாத்திரத்தில் நடிக்காமல், இயல்பாக கதாபத்திரமாகவே மாறிவிடுவதான் அவரது பலம். அதை அவர் என்றும் விட்டுவிடக் கூடாது.
‘விகடன்’ விமர்சனம், மார்க்கில் தொடங்கி சமூகவலைதள ரீல்ஸ், காணொலி மற்றும் பார்வையாளர்களின் விமர்சனம் வரை எல்லாமே திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றுகிறது. இந்த விமர்சனங்களை வைத்துதான் மக்கள் படத்தைப் பார்க்கலாமா என்று முடிவெடுக்கிறார்கள். அவ்வகையில் ‘கருடன்’ படத்திற்கு நல்ல வரவேற்பைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்று பேசியிருக்கிறார்.