புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் 12 எம்.பி.க்கள் மீது பல கிரிமினல் வழக்குகள் பதிவாகி விசாரணை நிலுவையில் உள்ளது. இதில் 2 வருடத்துக்கும் அதிகமான தண்டனை வாய்ப்பால் அவர்கள் எம்.பி பதவி பறிபோகும் ஆபத்தும் உள்ளது.
நாட்டிலேயே அதிகமாக உ.பி.யில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதன் 12 எம்.பி.க்கள் மீது நடைபெறும் வழக்குகளில் நீதிமன்றத் தீர்ப்புகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்த தீர்ப்புகளில் அந்த எம்பிக்களுக்கு 2 வருடத்துக்கும் அதிகமான தண்டனை அளிக்கப்பட்டால், அவர்களது பதவிகள் பறிபோகும் ஆபத்து உருவாகி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் சட்டப்படி 2 வருடம் தண்டணை பெறும் எம்.பி அல்லது எம்எல்ஏவின் பதவி பறிக்கப்படும்.
இந்தப் பட்டியலில், இண்டியா கூட்டணியில் 7 எம்.பி.,க்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் சமாஜ்வாதி கட்சியில் காஜீபூரின் அப்சல் அன்சாரி, ஜோன்பூரின் பாபுசிங் குஷ்வாஹா, சுல்தான்பூரின் ராம் புவல் நிஷாத், சண்டவுலியின் வீரேந்திரா சிங், ஆசம்கரின் தர்மேந்திரா சிங், பஸ்தியின் ராம் பிரசாத் சவுத்ரி ஆகிய 6 பேர் உள்ளனர்.
காங்கிரஸில் சஹரான்பூரின் இம்ரான் மசூத் உள்ளார். சுயேச்சைகளில் நகீனாவின் ராவண் என்கிற சந்திரசேகர் ஆஸாத் மீது வழக்குகள் உள்ளன. பாஜகவில் பத்தேபூர் சிக்ரியின் ராம் குமார் சஹார் மற்றும் ஹாத்தரஸின் அனுப் பிரதான் என இருவர் உள்ளனர்.
பாஜகவின் கூட்டணியான ராஷ்டிரிய லோக் தளம் கட்சியில் பிஜ்னோரின் சந்திரன் சவுகானும், பாக்பத்தின் ராஜ்குமார் சங்வான் ஆகிய இருவர் மீதும் வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த 12 பேரில் சிலர் முக்கியமான எம்.பி.,க்களாக உள்ளனர்.
சமாஜ்வாதியின் காஜிபூர் எம்பியான அப்சல் அன்சாரி குண்டர் சட்டத்தில் கைதாகி இருந்தார். இவருக்கு மாவட்ட நீதிமன்றத்தில் 4 வருடம் தண்டனை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த தண்டனையை உபியின் அலகாபாத் நீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தால் அப்சல், தேர்தலில் போட்டியிட்டிருந்தார். இதன் தீர்ப்பில் அப்சலின் தண்டனை உறுதி செய்யப்பட்டால் அவரது பதவி பறிபோகும்.
எனினும், அலகாபாத் தீர்ப்பில் மேல்முறையீடு செய்ய உச்ச நீதிமன்றம் வாய்ப்பும் அப்சலிடம் உள்ளது. நகீனாவின் சுயேச்சையான ராவண் மீது 36 வழக்குகள் பதிவாகி நடைபெறுகின்றன.
இவற்றில் பெரும்பாலான வழக்குகளில் அதிக தண்டனைக்குரிய பிரிவுகள் பதிவாகி உள்ளன. இவற்றில் சில வழக்குகளின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளது.
அதில் 2 வருடத்துக்கும் அதிகமான தண்டனை கிடைத்தால் ராவணின் எம்பி பதவி பறி போகும் ஆபத்து உள்ளது. சுல்தான்பூரில் பாஜக வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியை தோற்கடித்தவர் சமாஜ்வாதியின் ராம் புவல் நிஷாத். இவர் மீது 8 கிரிமினல் வழக்குகள் பதிவாகி நடைபெறுகின்றன. இதில் கோரக்பூர் மாவட்டத்தில் குண்டர் சட்டம் ஒன்றாக உள்ளது. இரண்டு வழக்குகள் கொலை முயற்சிக்கானப் பிரிவுகளில் உள்ளன.
பிஹாரின் பூர்ணியாவில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற ராஜீவ் ரஞ்சன் எனும் பப்பு யாதவ் மீது தேர்தல் வெற்றிக்கு பின் வழக்கு பதிவாகி உள்ளது. இதில் அவர் ரூ.1.25 கோடி கேட்டு தொழிலதிபரை மிரட்டியதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், பாட்னா உயர் நீதிமன்றத்தில் பப்பு யாதவுக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளது.