பாகல்பூர் (பிஹார்): நரேந்திர மோடியின் பாதங்களை தொட்டதன் மூலம் முதல்வர் நிதிஷ் குமார், பிஹாருக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார் என்று தேர்தல் வியூக வகுப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிஹாரில் ‘ஜன் சுராஜ்’ பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் பிரசாந்த் கிஷோர், பாகல்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் நேற்று (ஜூன் 14) உரையாற்றினார். அப்போது அவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றத் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரது கால்களை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தொட்டு வணங்கினார். ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பவர் அந்த மாநில மக்களின் பெருமை. மாநிலத்தின் முதல்வராக இருக்கக்கூடிய நிதிஷ் குமார், மோடியின் கால்களை தொட்டதன் மூலம் பிஹாருக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்.
நிதிஷ் குமாருடன் கடந்த காலத்தில் பணியாற்றிய நான், இப்போது ஏன் விமர்சிக்கிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். அப்போது அவர் வித்தியாசமான மனிதராக இருந்தார். அப்போது அவர் மனசாட்சியை விற்கக்கூடியவராக இருக்கவில்லை.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் நிதிஷ் குமார் முக்கிய பங்கு வகிப்பதாகப் பேசப்படுகிறது. ஆனால் பிஹார் முதல்வர் தனது பதவியை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்? அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மாநிலத்திற்கான நன்மைகளை உறுதிப்படுத்தவில்லை. மாறாக, 2025 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும் பாஜக ஆதரவுடன் ஆட்சியில் தொடர வேண்டும் என்பதற்காகவே நிதிஷ் குமார் மோடியின் கால்களை தொடுகிறார்” என விமர்சித்தார்.
தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோர், கடந்த 2015-ம் ஆண்டு பிஹார் சட்டமன்றத் தேர்தலின்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வெற்றிக்காக வியூகங்களை வகுத்தளித்தார். பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் கட்சியில் இருந்து வெளியேறினார். 2014 மக்களவைத் தேர்தலின்போது நரேந்திர மோடிக்காக வியூக வகுப்பாளராக செயல்பட்ட பிரசாந்த் கிஷோர், பின்னர் மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால், மு.க. ஸ்டாலின், ஜகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கும் தேர்தலின்போது வியூக வகுப்பாளராக செயல்பட்டுள்ளார்.