சத்தீஸ்கர் என்கவுன்ட்டர் | 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை; பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்ட்டரில் 8 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில், பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியும் சமமற்ற நிலப்பரப்பும் மாவோயிஸ்ட்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அவர்களை ஒடுக்க மத்திய, மாநிலஅரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இத்தகைய முயற்சி ஒன்றின்போது 8 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ராய்ப்பூரில் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் இன்று (ஜூன் 15) ஈடுபட்டனர்.

நாராயண்பூர், கான்கேர், தண்டேவாடா மற்றும் கொண்டகான் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி), சிறப்பு அதிரடிப் படை (எஸ்டிஎஃப்) மற்றும் இந்தோ திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ஐடிபிபி) 53வது பட்டாலியன் ஆகியோர் அடங்கிய குழுவின் இந்த நடவடிக்கை ஜூன் 12 அன்று தொடங்கப்பட்டது.

இந்த கூட்டுக் குழு, நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ​​அபுஜ்மத் காட்டில் இன்று காலை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், 8 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். ஒரு பாதுகாப்புப் படை வீரர் வீர மரணம் அடைந்தார்.

இந்தச் சம்பவத்தில் மேலும் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது. கூடுதல் விவரங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.