சென்சிட்டிவான நெல்லை மாவட்டத்தில் சாதிய படுகொலைகள், பழிக்குப் பழி சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், நெல்லையில் நடந்த சாதி மறுப்பு திருமணத்துக்குப் பின் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி என்பவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இருவரின் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்ய முடிவெடுத்த அவர்கள், பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். சாதி மறுப்புத் திருமணத்துக்கு கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சட்டரீதியான உதவிகளைச் செய்துள்ளனர்.
இந்த நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு திரண்டு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அலுவலகத்தில் இருந்த ஊழியர்களைத் தாக்கியுள்ளனர். பின்னர் அலுவலக கண்ணாடி ஜன்னல், கதவுகள் உள்ளிட்ட பொருள்களை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், பெண்ணின் தந்தை முருகவேல், தாய் சரஸ்வதி, வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் பந்தல் ராஜா உள்ளிட்ட 13 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது 9 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான கனகராஜ், “கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்த மாற்று சமூகங்களைச் சேர்ந்த மதன்குமாரும் உதய தாட்சாயினியும் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். தங்களுக்கு உதவுமாறு கட்சி அலுவலகம் வந்த அவர்களுக்கு எங்கள் கட்சி நிர்வாகிகள் உதவி செய்திருக்கிறார்கள்.
பெண்ணின் பெற்றோர் உதய தாட்சாயினியையும் மதன்குமாரையும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அதனால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து கட்சி நிர்வாகிகள், நெல்லை மாநகர காவல்துறை கமிஷனருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அவரும் சில போலீஸாரை பாதுகாப்புக்காக அனுப்பி வைத்திருக்கிறார். பாதுகாப்புக்காக போலீஸார் வந்த சில நிமிடங்களிலேயே பெண்ணின் குடும்பத்தினரும் மேலும் சிலரும் ஆக்ரோஷமாக கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து வாக்குவாதம் செய்ததோடு தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 4 வருடங்களில் 240 கொலைகள் நடந்துள்ளன. சராசரியாக வாரத்துக்கு ஒரு கொலையை விடவும் கூடுதலாக நடந்திருக்கிறது. அதற்கு காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டியது அவசியம். தற்போது சாதி மறுப்புத் திருமணம் செய்துள்ள தம்பதிக்கு பாதுகாப்பு அளிப்பதோடு, எங்கள் கட்சியின் பெண் நிர்வாகி பழனியை திட்டமிட்டு தாக்கியிருப்பதால் அவரது வீட்டுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களைக் கொலை செய்யும் நோக்கத்தோடு சிலர் வந்திருக்கிறார்கள். கட்சி அலுவலகத்துக்கு பாதுகாப்புக்கு வந்த போலீஸாரின் பின்னாலேயே சாதிய கும்பல் கொலை வெறியுடன் வந்தது எப்படி? அவர்கள் வந்து கட்சி அலுவலகத்துக்குள் தேடியபோது, சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் இல்லாததால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இது தொடர்பாக காவல்துறையில் இருக்கும் கறுப்பு ஆட்டை கண்டுபிடித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து சாதாரண சம்பவம் அல்ல. இதன் பின்னணியில் கூலிப்படை உள்ளது. அதனால் இந்த தாக்குதல் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவில் உள்ளவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். பெண்ணின் குடும்பத்துக்கு சம்பந்தம் இல்லாமல் வந்த பந்தல் ராஜா மற்றும் பெண்ணின் தந்தை, தாய் மற்றும் சகோதரரின் செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தால் இதன் பின்னணியில் இருக்கும் கூலிப்படை மற்றும் காவல்துறைன் நெருக்கம் பற்றி அறிய முடியும்.
சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை கொலை செய்ய நடந்த முயற்சி தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி வழக்கு பதிவு செய்யக் கூட காவல்துறை மறுக்கிறது. தற்போது வரை கட்சி அலுவலகத்தைத் தாக்கிய கும்பலுடன் காவல்துறையைச் சேர்ந்த சிலர் தொடர்பில் இருக்கிறார்கள். அதனால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இந்த சம்பவம் குறித்து பேச உள்ளோம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88