சூரி நடிப்பில் வெளியான ‘கருடன்’ திரைப்படம் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுள்ளது.
இப்படத்தில் சசிகுமார், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து படத்திற்குப் பலம் சேர்த்திருந்தார். ரசிகர்களிடையேயும் சசிகுமார் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற ‘கருடன்’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்டு பேசிய சசிகுமார், சூரி கதைநாயகனிலிருந்து கதாநாயகனாக மாறிவிடக்கூடாது என்றும் தோல்விப் படங்களுக்கு வெற்றி விழா நடக்கிறது என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
இது குறித்துப் பேசியிருக்கும் அவர், “இப்போதெல்லாம் ஓடாத தோல்விப் படங்களுக்குத்தான் ‘சக்சஸ் மீட் (வெற்றி விழா)’ வைக்கிறார்கள். அதனால்தான் இப்படத்தின் வெற்றி விழாவிற்கு ‘தாங்க்ஸ் மீட்’ என்று பெயர் வைக்கலாம் என்றேன். தோல்விப் படத்திற்கும் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். தோல்வியை ஏற்றுக் கொள்ளப் பயப்படுகிறார்கள். தோல்வியை ஏற்றுக்கொண்டால்தான், தவறுகளை உணர்ந்து சரிசெய்து கொண்டு அடுத்த படத்தைச் சிறப்பாக எடுக்க முடியும். கலைஞர்களுக்குத் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும். இப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் தயாரிப்பாளரும், இயக்குநரும்தான்.
சூரிக்காகத்தான் இப்படத்தில் நடித்தேன். உதவி செய்யப்போய், அது எனக்குப் பெரும் உதவியாக மாறி, நல்ல வரவேற்பைக் பெற்றுத் தந்திருக்கிறது இத்திரைப்படம். சூரி சிறப்பாக நடித்திருக்கிறார். ‘புரோட்டா சூரி’, ‘காமெடி நடிகர் சூரி’ என்ற பெயரையெல்லாம் மாற்றி, கதைநாயகனாக மாறியிருக்கிறார்.
சூரி ‘கதைநாயனாக’ இருக்கும் வரை அவருக்கு வெற்றிக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். ‘கதாநாயகனா’ மாறிவிட்டால் அவ்வளவுதான். அதனால், கதைநாயகனாகவே அவர் இருக்க வேண்டும். ஓ.டி.டி-யை நம்பி இல்லாமல் இனி வரும் எல்லா திரைப்படங்களும் திரையரங்குகளிலேயே நல்ல வரவேற்பைப் பெற்று, வெற்றி பெற வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.