கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க ஆரம்பித்துவிட்டன. பிள்ளைகள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு `அப்பாடா’வென்று களைப்பாக வந்து சோஃபாவில் அமர்ந்தாள் கீதா.
`’இந்த எட்டாம் நம்பர் ஸ்பேனரை பாத்தியா?’’ என்றவாறே லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு உள்ளே வந்தான் ஆனந்த்.
“ஏங்க… நானும் தான் வீட்ல சமைக்கிறேன், துவைக்கிறேன், பாத்திரம் தேய்க்கிறேன். என்னிக்காச்சும் உங்ககிட்ட வந்து கடுகு டப்பா காணோம், சோப்பைக் காணோம், துண்டை பாத்தீங்களானு கேட்டிருக்கேனா? ஒரு பொருளை ஒரு இடத்துல வச்சா மறந்துட வேண்டியது…’’ – இருந்த டென்ஷனை எல்லாம் ஆனந்திடம் காட்டிவிட்டு சற்று நேரம் சோஃபாவிலேயே இளைப்பாறிக் கொண்டிருந்தாள் கீதா.
“பசங்க ஸ்கூலுக்குப் போகலைனா சேட்டை பண்றாங்கனு டென்ஷன் ஆகறது, போனாங்கன்னா அவங்கள ரெடி பண்ணி அனுப்பிட்டு டென்ஷன் ஆகறது. இந்த பொம்பளைங்களே இப்டிதான்பா..’’ – ஆனந்த் சும்மா இல்லாமல் வம்படியாகப் பேசிக் கொண்டே டூல்ஸ் பாக்ஸில் ஸ்பேனரை தேடிக் கொண்டிருந்தான். பைக்கின் நம்பர் ப்ளேட் லூஸாக இருக்கவும் அதை சரிபார்க்க ஆரம்பித்து, அப்படியே வண்டியின் ஒவ்வொரு பகுதியாக துடைத்து எண்ணெய் விட்டுக் கொண்டிருந்தான்.
ஆனந்த் பேசுவது எதையும் சட்டை செய்யாமல் அழுக்குத் துணிகளை எடுத்து ஊறப்போட ஆரம்பித்தாள் கீதா. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வீடே அமைதியாக இருந்தது. இவ்வளவு நாள்களாக பிள்ளைகள் ஓடியாடி சத்தம் போட்டு விளையாடிக் கொண்டிருந்த இடங்களெல்லாம் அமைதியாக இருந்தன. கீதாவுக்கு இந்த வெறுமை என்னவோ போல் இருந்தது. இந்த கோடை விடுமுறைக்கு பிள்ளைகள் புதிதாக வாங்கி வைத்திருந்த மீன் தொட்டியில் வண்ண மீன்கள் சலனமில்லாமல் நீச்சலிட்டுக் கொண்டிருந்தன. கீதாவின் கண்கள் அந்த வண்ணங்களிலேயே மூழ்கிப் போயின.
இரண்டு மாதங்களாக ஆனந்திடம் பெர்சனலாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை என்பதை அப்போது தான் அவள் லேசாக உணர ஆரம்பித்தாள். திருமணமான புதிதில் ஆனந்த், கீதாவுக்கு இதே மாதிரி ஒரு மீன் தொட்டியை வாங்கி வந்து பரிசு கொடுத்து கட்டியணைத்து முத்தம் கொடுத்ததை இப்போது மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகிறாள்.
பிள்ளைகள் பள்ளிக்குப் போன பிறகு எப்போதாவது கீதாவை பகலில் அழைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தான் ஆனந்த். `ரெண்டு புள்ள பெத்ததுக்கப்புறம் பகல்ல என்ன கொஞ்சல் வேண்டி இருக்கு’ என்று கீதா வேண்டுமென்றே பாவனை செய்வதும், அவள் பாவனையைப் புரிந்து கொண்டு ஆனந்த் அவளை இழுத்துக் கொண்டுபோய் கட்டிலில் தள்ளுவதும் என ரொமான்ஸுக்கு கொஞ்சமும் பஞ்சம் வந்ததில்லை. ஆனால், இப்போது இரண்டு மாதங்களாக பிள்ளைகள் வீட்டில் இருந்ததால் ஏற்பட்டிருக்கும் பெரிய இடைவெளியைக் கூட நினைத்துப் பார்க்காமல், ஆனந்த் ஏன் வண்டியைக் கழுவிக் கொண்டிருக்கிறான் என்று புரியாமல், கோபத்தில் துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தாள் கீதா.
`இந்த வீட்டுல ஒரு வாஷிங் மெஷின் கூட இல்ல… நம்ம தானே கஷ்டப்பட்டு துணி தொவைக்கிறோம்… கூடமாட ஒத்தாசி பண்ணலனாலும் பரவால்ல… பின்னாடி வந்து நின்னு நாலு வார்த்தை அன்பா பேசுனா என்ன? பசங்ககூட வீட்ல இல்லையே… அப்டியே பின்னாடி வந்து கட்டிப்புடிச்சு ஒரு முத்தம் கித்தம்…. என்ன மனுஷனோ தெரில’ – ஆனந்த் அவளை கண்டுகொள்ளவில்லை என்கிற எரிச்சலில் தன் கற்பனைக்கு உருவம் கொடுக்க முடியாமல் மனதுக்குள் புலம்பிக் கொண்டே இன்னும் இன்னும் இருக்கிற கோபத்தை எல்லாம் அழுக்குத் துணிகளின் மீது காட்டிக் கொண்டிருந்தாள்.
“என்னடா என்னிக்கும் இல்லாம ஒரு மனுஷன் வண்டிய சுத்தபத்தமா துடைச்சிட்டு இருக்கானே… அப்டியே ஒரு ரவுண்டு போலாம் வர்றீங்களானு கேக்குறாளா பாரு… எப்பப்பாரு…. அவ உண்டு அவ வேலை உண்டுன்னு கெடப்பா… எதுனாலும் நம்ம தான் போயி மகராணிகிட்ட கேக்கணும்’’ – இந்தப் பக்கம் ஆனந்த் கீதாவை திட்டிக் கொண்டே வண்டியைத் துடைத்துக் கொண்டிருந்தான்.
வானம் மேகமூட்டத்தோடு இருப்பது இருவரையும் இன்னும் இன்னும் இம்சை செய்து கொண்டே இருந்தது. பின் வாசலின் ஒரு பக்கம் ஆனந்த் வண்டியை கழுவுவதும், கீதா துணி துவைப்பதுமாகவே நிமிடங்கள் நகர்ந்து போயின. அடித்துத் துணி துவைக்கும் போது பட்டுத் தெறித்த சோப்பு நீர் ஆனந்தின் கண்ணில் விழவும், அவன் ’ஆ’வென்று கத்திக் கொண்டே கண்ணைக் கசக்க ஆரம்பித்தான்.
“ஏன்டி …. பாத்துத் துவைக்க மாட்டியா ?’’ – கீதாவைப் பார்த்துக் கத்தவும், ’’தூரமா போய் வண்டியைக் கழுவ வேண்டியதுதானே?’’ என்று கீதா பதிலுக்குக் கத்தவும் இருவருக்குள்ளும் தேவையில்லாமல் சண்டை மூண்டது. தாபத்தில் தவித்த இருவரும், அதை ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்ளாமல், யார் முதலில் அழைப்பது என்கிற ஈகோவிலேயே பொய்க் கோபம் வளர்த்துக் கொண்டு, இப்போது நிஜத்தில் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
துவைக்க வேண்டிய துணிகளைப் பாதியிலேயே விட்டுவிட்டு ஹாலில் வந்து அமர்ந்தாள் கீதா. கையில் இருந்த டூல்ஸ் பாக்ஸை கோபத்தில் தூக்கி வீசிவிட்டு ஆனந்தும் பால்கனி ஊஞ்சலில் அமர்ந்திருந்தான். துணி துவைத்த ஈரம் கீதாவின் உடையெங்கும் காயாமலிருந்தது. ஆனந்தின் சட்டையை ஊற வைக்கும் முன் பாக்கெட்டில் இருந்து எடுத்த ஒரு சிறிய பாலிதீன் கவரை ஜாக்கெட்டுக்குள் செருகி இருந்தாள் கீதா. இப்போது, நிதானமாக அந்த கவரை எடுத்துப் பிரித்துப் பார்க்க, ஏதோவொரு பொருளை வாங்கியதன் ரசீது போல் தெரிந்தது. ஈரக்கைகளைத் துடைத்துக் கொண்டு படித்தாள். புதிய வாஷிங் மெஷின் வாங்கி இருப்பதன் ரசீது அது. நேற்றைய தேதியில் ரசீது இருக்கிறது. ஆனந்திடம் எப்படி இதுபற்றி கேட்டுத் தெரிந்துகொள்வது எனப் புரியாமல், ரசீதை எடுத்து டீப்பாய் மீது வைத்துவிட்டு எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருக்கிறாள்.
பால்கனி அருகே இருந்த சிறிய பிரம்புக் கூடையில் சம்பங்கிப் பூக்கள் நிரம்பி இருந்தன. சம்பங்கி பூ வைத்தால் ஆனந்துக்கு பிடிக்குமென்றும், அதன் நறுமணத்தில் அவன் அப்படியே சொக்கிப் போய் கட்டில் வரை அழைத்துப் போவான் என்பதும் கீதாவுக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாதங்களாகவே கீதாவின் தலையில் சம்பங்கிப் பூக்கள் இல்லை. கொடியில் பூத்து வாடி உதிர்ந்த பூக்களைப் பார்த்து கண்டும் காணாமல் போனவன், இப்போது ஊசியால் நேர்த்தியாகக் கோர்த்து வைக்கப்பட்டிருந்த சம்பங்கிச் சரத்தைப் பார்த்ததும் என்னவோ போலாகிறான். பால்கனியில் இருந்துகொண்டே மெதுவாக கீதாவை எட்டிப் பார்க்கிறான்.
இருவருக்குமிடையே அமைதியோ அமைதி!
யார் முதலில் அழைப்பது என்கிற ஈகோ இப்போது சண்டையில் முடிந்து, யார் முதலில் பேசிக் கொள்வது என்பதில் வந்து நிற்கிறது. தெருவில் ஒரு வாகனம் வந்து நிற்கவும், இருவரும் ஒருசேர எட்டிப் பார்க்கிறார்கள். வாஷிங் மெஷினை டெலிவரி செய்ய வந்த வாகனம். வந்தவர்கள் மெஷினை இறக்கிவிட்டுச் செல்கிறார்கள்.
“இன்னும் ஏசி வாங்குனதுக்கே இ.எம்.ஐ முடியலை. இதுல வாஷிங் மெஷின் ஒண்ணுதான் கொறைச்சல்’’ – அலட்டிக் கொள்ளாமல் பின்வாசல் போனாள் கீதா. சம்பங்கியின் நறுமணத்தில் ஈகோவை விட்டுவிடலாமா? இல்லை வாஷிங் மெஷினை கண்டுகொள்ளாமல் போனதற்காக கோபத்தில் இருக்கலாமா என்றெல்லாம் இரண்டு விதங்களில் யோசித்துக் கொண்டிருக்கிறான் ஆனந்த். பின் வாசலில் இருந்து மீண்டும் துணி துவைக்கும் சத்தம் கேட்கிறது. நேராக வேகமாக அங்கு வந்து நின்றான் ஆனந்த்.
“இப்போ எதுக்கு இப்டி மூஞ்சை தூக்கி வச்சிட்டு இருக்க? வாஷிங் மெஷினை பிரிச்சுப் பாக்கலையா?’’ – சொல்லிவிட்டு மீண்டும் அங்கிருந்து நகர்ந்தான் ஆனந்த்.
கீதாவுக்கு என்னவோ போலிருந்தது. அடித்து துவைத்ததில் பைக்கெல்லாம் சோப்பு நீர் கரைகள். பக்கவாட்டுக் கண்ணாடியை முந்தானையால் துடைத்துவிட்டுப் பார்க்கிறாள். ஆனந்த் அவள் பின்னால் வந்து நிற்பது முன்னால் இருக்கும் கண்ணாடியில் பிம்பமாய் விழுகிறது. மீண்டும் ஒரு முறை கண்ணாடியைத் துடைக்கிறாள். கிரீஸ் கரை போகவில்லை. அப்போது ஒரு கை அவள் இடுப்பை வளைத்துப் பிடித்துக் கொண்டு இழுத்து அணைக்க முயல்கிறது. சட்டென திரும்புகிறாள். கிரீஸ் கரை ஆனந்தின் முகத்தில் தான் படிந்திருக்கிறது.
`ஈகோவை துடைப்பதா இல்லை அவன் முகத்திலிருக்கும் கிரீஸ் கரையை துடைப்பதா?’ என ஒரு கணம் யோசிக்கிறாள். எல்லாவற்றையும் துடைத்துப் போட்டுவிட்டு, இடுப்பில் கைவைத்திருக்கும் ஆனந்துக்கு முன்பு ஈகோ காட்டுவதில் பலனில்லை என்று யோசிக்கிறாள்.
’`மெஷின் வாங்குனா சொல்ல மாட்டிங்களா?’’ – செல்லக் கோபம் பூத்தாள்.
“என்னை எவ்ளோ வேணும்னாலும் அடிச்சு துவைச்சிக்க… துணியெல்லாம் பாவம்ல. அதான் சொல்லாம கொள்ளாம வாங்கிட்டேன்’’ – மெதுவாகச் சிரித்தான் ஆனந்த்.
அவனை முட்டித் தள்ளிவிட்டு சம்பங்கிச் சரத்தை தலையில் சூடினாள். மகரந்தம் மொய்க்கும் வண்டைப் போல ஓடிவந்து அவள் முதுகில் ஒட்டிக் கொண்டான் ஆனந்த்.
இருவருமே கொள்ளைக் காதலை உள்ளுக்குள் தேக்கி வைத்திருக்கிறார்கள். அதை யாராவது முதலில் சொல்லி இருக்கலாம். அல்லது சிறிய சமிக்ஞையாவது செய்திருக்கலாம். ஈகோவால் சண்டைப் போட்டுச் சமாதானமாகி, பின் காதலால் மட்டுமே ஈகோவை வென்றெடுத்திருக்கிறார்கள்.
“பசங்க வர்றதுக்குள்ள வண்டியில ஒரு ரவுண்டு போய்ட்டு வரலாமா?’’ என்றாள்.
“அதுக்கு முன்னாடி நம்ம ஒரு ரவுண்ட் போலாமா?’’ – கண்ணடித்தான்.
எதுவும் சொல்லாமல் கட்டிக் கொண்டாள் கீதா. அவன் முகத்தில் படிந்திருந்த கிரீஸ் கரை அவள் பின்னங்கழுத்திலும் பதிந்தது.
– ரகசியங்கள் தொடரும்
– அர்ச்சனா