அம்ரேலி,
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நேற்று மதியம் 12 மணியளவில் சுரக்புரா கிராமத்தில் உள்ள பானு ககாடியா என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த ஆர்வி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. சுமார் 50 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருந்த நிலையில், சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அம்ரேலி தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நேற்று இரவு 8 மணியளவில், காந்திநகரில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சுமார் 15 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு இன்று அதிகாலை 5:10 மணியளவில் குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த மருத்துவக் குழுவினர், உடனடியாக குழந்தையை அம்ரேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.