Happy Teeth: பல் எடுத்தால் முகத்தோற்றம் மாறுமா?

பல்லை அகற்றிய பிறகு வாய் சுகாதாரத்தை எவ்வாறு பேண வேண்டும், பல் அகற்றப்பட்ட இடத்தில் மாற்றுப் பற்கள் பொருத்த வேண்டுமா, பற்கள் பொருத்தாவிட்டால் என்ன நேரிடும் என்பது பற்றி விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் சுரேஷ் வீரமணி. “பல் எடுத்த இடத்தை சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். வாயில் தண்ணீர் நிரப்பி அதிக அழுத்தம் கொடுத்து கொப்பளிக்கக்கூடாது.

பல் எடுத்த இடத்தை சுத்தமாகப் பராமரிக்க வேண்டியது அவசியம்.

வாயில் தண்ணீர் நிரப்பி தலையை மட்டும் லேசாக இங்கும் அங்குமாக அசைத்தாலே போதுமானது. வழக்கம்போல பற்களை பிரஷ் செய்யலாம். பல் எடுத்த இடத்தில் மட்டும் பிரஷ் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தையல் போட்ட இடத்தில் உணவுத்துகள் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. வாய் கொப்பளிக்கும்போது அதிலிருக்கும் உணவுத்துகள் வெளியேறிவிட்டதா என்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தையல் போட்டிருந்தால்…

சிலருக்கு பல் எடுத்த பிறகு வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படியானவர்கள் வெளிப்புறத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். பல் எடுத்த 36 மணிநேரத்தில் வீக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம். அந்த நேரத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது பயனளிக்கும். சிலருக்கு பல் எடுக்கும்போது அந்த இடத்தில் தையல் போடுவார்கள். பிரிக்க வேண்டிய தையல் என்றால்  ஏழு நாள்களில் மருத்துவமனைக்குச் சென்று அதைப் பிரிக்க வேண்டும். உடல் கிரகித்துவிடும் தையல் என்றால் சில நாள்களில் வாயிலேயே கரைந்துவிடும்.

பல் எடுத்த பிறகு வீக்கம்…

பல்லை எடுத்துவிட்டால் அந்த இடத்தில் செயற்கைப் பல் பொருத்த வேண்டும். இல்லையென்றால் மற்ற பற்கள் எல்லாம் நகர ஆரம்பிக்கும். வாயின் பின்பகுதியில் உள்ள பல் என்பதாலும், பல் எடுத்த இடைவெளியே தெரியாது என்பதாலும் கடைவாய்ப் பல்லை எடுத்தவர்கள் அப்படியே விட்டுவிடுகின்றனர். பல் என்பது சாப்பிடுவதற்கு மட்டுமானது அல்ல. வலது பக்கத்தில் உள்ள ஒரு கடைவாய்ப் பல் அகற்றப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

அப்போது வலது பக்கத்தில் உணவை மெல்லாமல், இடது பக்கத்தை மட்டுமே பயன்படுத்தி சாப்பிடுவார்கள். இதனால் அந்த ஒற்றைப் பக்கத்துக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு தேய்மானம் ஏற்படலாம். கீழ் வரிசையில் உள்ள பல்லை எடுத்தால் அதற்கு நேர் மேலாக உள்ள பல் கீழே இறங்கும், பக்கவாட்டில் உள்ள பற்களும் பல் வரிசையிலிருந்து சற்று நகரத் தொடங்கும்.

மேலே உள்ள பற்களை எடுத்தாலும்  அதற்கு அருகில் உள்ள பற்கள் பக்கவாட்டில் நகரும். கடிக்கும்போது பற்கள் சரியாக ஒன்றின் மேல் ஒன்று பொருந்தாது. ஒரு பல் எடுத்தாலே வாயில் உள்ள பரிமாணங்கள் அனைத்து மாறும்.

செயற்கைப் பல்

சிகிச்சைக்குப் பல் அகற்றம்…

அதனால் எந்தப் பல்லை எடுத்தாலும் அந்த இடைவெளியில் செயற்கைப் பற்கள் பொருத்த வேண்டியது அவசியம். ஞானப்பல்லை அகற்றினால் மட்டும் மாற்றுப்பல் பொருத்த வேண்டிய அவசியமில்லை.

சில நேரங்களில் சிகிச்சைக்காக பற்களை அகற்ற வேண்டி வரும். சிலருக்கு தாடையின் அளவு குறைவாக இருந்து, பல்லின் பரும அளவு அதிகமாக இருக்கும். இதனால் வாய்க்குள் அடங்காமல் பற்கள் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும்.

சிலருக்கு பற்கள் முன்னாலும் பின்னாலும் நெருக்கிப் பின்னியது போன்ற நிலையில் இருக்கும். இதுபோன்ற நேரங்களில் சிகிச்சைக்காக சில பற்களை அகற்றுவோம். கடைவாய்ப்பற்களுக்கு முன்பாக இருக்கும் பற்களில் (Premolar Tooth) மேல் இரண்டு பற்கள், கீழ் இரண்டு பற்களை அகற்றிவிட்டு க்ளிப் பொருத்துவோம். க்ளிப் போடுவதால் பற்களின் நடுவே இருக்கும் இடைவெளி குறைந்து, பற்கள் அருகருகே வந்துவிடும்.

Dr. Suresh Velumani

பற்களின் இடைவெளி முழுவதுமாக அடையும்வரை தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டியவது அவசியம். பற்களுக்கு இடையில் ஒரு மில்லிமீட்டர் இடைவெளி இருந்தால்கூட பற்கள் மீண்டும் நகரத் தொடங்கும்.

முகத்தோற்றம் மாறுமா?

ஒரு பல் மட்டும் அகற்றினாலோ, ஞானப்பல்லை அகற்றுவதாலோ முகத்தோற்றம் மாற வாய்ப்பில்லை. ஆனால், அதிகமான எண்ணிக்கையில் பற்களை அகற்றும் பட்சத்தில் முகத்தோற்றம் மாறக்கூடும். காரணம், எந்தப் பகுதியில் இடைவெளி இருந்தாலும் அந்தப் பகுதியை நோக்கி உடல் நகரும். கீழ்வரிசையில் பற்கள் இல்லையென்றால் கன்னம் பகுதி உள்ளே சென்றது போன்ற தோற்றம் ஏற்படும்.

மேலும் ஒரு பகுதியில் பற்கள் இல்லை என்றால், அந்தப் பகுதியை உணவை மெல்வதற்குப் பயன்படுத்தமாட்டோம். பல் இருக்கும் பகுதியைப் பயன்படுத்திதான் மெல்லுவோம். பற்கள் இல்லாத பக்கத்தைப் பயன்படுத்தாததால் அங்கிருக்கும் தசைகள் பலவீனமடையும். அதனாலும் முகம் உள்ளே சென்றது போன்ற தோற்றம் ஏற்படும்” என்றார் அவர்.

பல் எடுத்தால் முகத்தோற்றம் மாறுமா?

பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்.

பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.