Cinema Roundup: `தங்கலான்' சிங்கிள்; தயாராகி வரும் `கோட்' அப்டேட் – இந்த வார டாப் சினிமா தகவல்கள்!

இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்!

ஜி.வி.பிரகாஷ் கொடுத்த ‘தங்கலான்’ சிங்கிள் அப்டேட்!

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கிற ‘தங்கலான்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிற இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக தான் இசையமைக்கும் திரைப்படங்கள் குறித்து அப்டேட்களைக் கொடுப்பார் ஜி.வி.

தங்கலான்

அந்த வகையில் தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ‘லக்கி பாஸ்கர்’, ‘தங்கலான்’ ஆகிய திரைப்படங்கள் குறித்தான அப்டேட்களைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பதிவில் அவர், “‘லக்கி பாஸ்கர்’ மற்றும் ‘தங்கலான்’ திரைப்படங்களில் முதல் சிங்கிள் பாடலை முடித்துத் தயாரிப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டேன். இந்த இரண்டு திரைப்படங்களின் சிங்கிளும் கூடிய விரைவில் வெளிவரும்” எனக் கூறியிருக்கிறார்.

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியின் ‘கோட்’ அப்டேட்!

நடிகர் விஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. மேலும், ரசிகர்களும் அவ்வப்போது இயக்குநர் வெங்கட் பிரபுவிடமும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடமும் சமூக வலைதளப் பக்கங்களில் ஜாலியாக அப்டேட்களைக் கேட்பார்கள். அதே போல ஜாலியான பாணியில் வெங்கட் பிரபுவும், அர்ச்சனா கல்பாத்தியும் பதிலளிப்பார்கள். சமீபத்தில் அர்ச்சனா கல்பாத்தி விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘மஹாராஜா’ திரைப்படம் குறித்து ஒரு பதிவிட்டிருந்தார்.

GOAT

அந்த பதிவின் கமென்ட்டில் ஒருவர் ‘கோட்’ திரைப்படத்தின் அப்டேட்டைக் கேட்டார். இதற்குப் பதிலளித்த அர்ச்சனா கல்பாத்தி, “இது ஸ்பெஷல் மாதம். அதனால் ஸ்பெஷலான அப்டேட்களும் நிச்சயமாக வரும்!” எனக் கூறியிருக்கிறார். நடிகர் விஜய் வருகிற ஜூன் 22-ம் தேதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். இதையொட்டி அரசியல் சார்ந்தும் சினிமா சார்ந்தும் அவர் பல அப்டேட்களை கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

சர்ச்சைகளுக்குப் பின் விமல் படத்தின் டைட்டில் மாற்றம்!

போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் தலைப்பை தற்போது மாற்றியிருக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு முதலில் ‘மா.பொ.சி’ எனப் பெயரிட்டிருந்தார்கள். தற்போது ‘சார்’ என்று மாற்றியிருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான சமயத்தில் ம.பொ.சி-யின் பேத்தியும் எழுத்தாளருமான பரமேசுவரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “நாடறிந்த ஒரு தலைவரை, எல்லைப் போராட்ட வீரரை, சிலம்புச்செல்வரை… அவருடைய பெயரைப் பயன்படுத்திக்கொண்டு, அவருடைய கதையில்லையென்று சொல்லலாமா? அவருடைய குடும்பத்தாரிடம் அனுமதி வாங்க வேண்டுமென்று தெரியாதா?” எனப் பதிவிட்டிருந்தது சர்ச்சையாகப் பேசப்பட்டது. தற்போது இயக்குநர் போஸ் வெங்கட் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “மா.பொ.சி தலைப்பு மாற்றப்பட்டுவிட்டது. தற்போது சார்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Sir & Raayan

தள்ளிப்போன ராயன் ரிலீஸ் தேதி!

நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ ஜூன் 13-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவித்திருந்தனர். ஆனால், இத்திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது எனத் தொடர்ந்து நெட்டிசன்களிடையே பேசப்பட்டு வந்தது. தற்போது ரிலீஸ் குறித்தான அறிவிப்பை படக்குழுவே அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது. அடுத்த மாதம் 26-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது. ஜூலை 28 நடிகர் தனுஷின் பிறந்தநாள் என்பதால் அதன் ஸ்பெஷலாக படத்தை ஜூலை 26-ம் திரைக்கு எடுத்து வருகிறார்கள்.

ஆமிர் கானின் மகன் படத்திற்குத் தடை!

ஆமிர் கானின் மகனான ஜுனைத் கான் நடிகராக பாலிவுட்டில் அறிமுகமாகும் திரைப்படம் ‘மகாராஜ்’. இத்திரைப்படம் நேற்றைய தினம் (ஜூன் 14) நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருந்தது. ஆனால், இந்து அமைப்பினரும் சமூக வலைதளப் பக்கங்களில் பலரும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் குஜராத் உயர்நீதிமன்றம் இத்திரைப்படத்தின் ரிலீஸை நிறுத்தி வைத்திருக்கிறது. 1862-ல் நிகழ்ந்த ‘மகாராஜா’ அவதூறு வழக்கை மையப்படுத்தி இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்தப் படத்தில் இந்து கடவுள்களை அவமதிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன எனக் கூறி இந்து அமைப்பினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Maharaj & Fahadh Faasil

பகத் பாசில் லைன் அப்!

பகத் பாசில் நடித்த ‘ஆவேஷம்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. இந்த ஹிட்டுக்குப் பிறகு மாஸான லைன் அப்களையும் தன் கைவசம் வைத்திருக்கிறார். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புஷ்பா -2’, இயக்குநர் சித்தார்த் நதலேலா இயக்கத்தில் ‘ஆக்ஸிஜன்’ ஆகிய தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் அமல் நீரத் இயக்கிவரும் ‘போகன்வில்லா’ என்ற மலையாளத் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தமிழில், வடிவேலுடன் ‘மாரீசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், ரஜினியுடன் இவர் நடித்திருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.