விஜயவாடா: “மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி அதிர்ஷ்டவசமானது அல்ல. அது மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை. அதன் பிரதிபலிப்பே ஆந்திர மாநில வெற்றி” என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் என இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சி, ஜன சேனா கட்சி மற்றும் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. மத்தியில் தற்போது அமைந்துள்ள பாஜக தலைமையிலான என்டிஏ ஆட்சியில் தெலுங்கு தேசம் முக்கிய அங்கம் வகிக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் மூன்று கட்சிகளும் பெற்றுள்ள வாக்கு சதவீதமே வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது என தனது கட்சி நிர்வாகிகளுடனான உரையாடலில் அவர் தெரிவித்தார். தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜன சேனா கூட்டணியின் வெற்றிக்காக அயராது உழைத்த கட்சி தொண்டர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டிய கடமை தங்களுக்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.
பழிவாங்கும் அரசியலை விடுத்து மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நமது நகர்வுகள் இருக்க வேண்டும். மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் திறன் சார்ந்த கணக்கெடுப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அண்ணா உணவகம் 100 நாட்களுக்குள் மீண்டும் திறக்கப்படும். மக்கள் பிரதிநிதிகள் தங்களது அலுவலகங்களில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். மாநில வளர்ச்சி மற்றும் மக்களின் நலன் என இரண்டையும் முன்னிறுத்தி நமது அரசு இயங்கும். வரும் 2029-ம் ஆண்டுக்கான தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தை இப்போதே அமைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.