பில் கேட்ஸிடம் கேட்கப்பட்ட `முதலாளித்துவமா, சோசலிசமா…’ கேள்விக்கு முதலாளித்துவத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.
உலகெங்கிலும் தங்களது தொழில் மூலம் தனித்து நிற்கும் மனிதர்களிடம் ஜீரோதாவின் இணை நிறுவனர் நிகில் காமத் கலந்துரையாடுவதுண்டு. இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சி `People by WTF’ என்ற பெயரில் வெளியாகிறது. அந்தவகையில் சமீபத்தில் நிகில் காமத், மைக்ரோசாப்ட்டின் இணை நிறுவனர் பில் கேட்ஸை பேட்டி கண்டுள்ளார்.
முதலாளித்துவமா, சோசலிசமா…
நிகில் அவரிடம், `பில்கேட்ஸ் சோசலிசத்தை தாண்டி முதலாளித்துவத்தை தேர்ந்தெடுப்பாரா?’… என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்தவர், “முதலாளித்துவம் ஒரு புதிய தொழிலைத் தொடங்க அல்லது ஒரு புதிய தயாரிப்பை முயற்சி செய்ய உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறது.
இது சுதந்திரத்தின் ஒரு யோசனையாகும். அது உங்கள் பின்னணி அல்லது வர்க்கத்தின் அடிப்படையில் இருப்பதல்ல. மேலும், இதில் கண்டுபிடிக்கும் சக்தி உள்ளது.
சில சமயங்களில் அரசாங்கங்களும் சந்தைகளும் போதுமான அளவில் புதுமையாக இருப்பதில்லை அல்லது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வருவதில்லை. பின்னர் அது பொது நலனுக்கான எடுக்கப்படும் தனியாரின் (philanthropy) பணியாக மாறுகிறது. நாங்கள் அரசாங்க செயல்பாடுகளைக் கையகப்படுத்த முயற்சிக்கவில்லை, அதை எங்களால் செய்ய முடியாது’’ என்றார்.
*இந்தியாவுடனான உறவு…
பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் `தி கிவிங் ப்ளெட்ஜ்’ (The Giving Pledge) என்ற இயக்கத்தை தொடங்கினர். இதில் உலகின் பெரும்பணக்காரர்கள் பலரும் தங்கள் செல்வத்தின் பெரும்பகுதியை தொண்டு பணிகளுக்கு கொடுக்கின்றனர்.
இந்நிலையில் ‘தி கிவிங் ப்ளெட்ஜ்’ பற்றி பேசிய நிகில் காமத், இந்தியாவுடனான பில் கேட்ஸின் உறவு குறித்து கேட்டார். அதற்கு பதிலளித்தவர், “மைக்ரோசாப்ட்டை தொடங்கியதிலிருந்து இந்தியாவுடன் எனக்கு அருமையான உறவு இருந்தது. அங்கு நாங்கள் மிகவும் ஸ்மார்ட்டாக உள்ள ஐடி பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தி, வாஷிங்டன் சியாட்டிலுக்கு அழைத்து வந்தோம்.
பின்னர் அவர்கள் திரும்பிச் சென்று எங்களுக்காக நான்கு இடங்களில் ஒரு மேம்பாட்டு மையத்தை உருவாக்கினர்’ என்றார்.
மைக்ரோசாப்ட்டின் சிஇஓ சத்யா நாதெல்லாவைப் பற்றி பேசிய பில் கேட்ஸ், “என்னுடன் பணிபுரியும் பல அற்புதமான நபர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதில் ஒரு பகுதியாக இருந்தவர், சத்யா. சிஇஓ-ஆக அற்புதமாக வேலையைச் செய்கிறார்’’ என்றார்.