அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 164 தொகுதிகளை கைப்பற்றி தெலுங்குதேசம் கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் மொத்தம் 24 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடு அமைச்சர்கள் அனைவருக்கும் நேற்று துறைகளை ஒதுக்கினார். இதில் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு பொது நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு, பொது நிறுவனங்கள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
துணை முதல்வராக நியமிக்கப்பட்ட பவன் கல்யாணுக்கு பஞ்சாயத்து ராஜ், கிராமிய வளர்ச்சி துறை, கிராமிய குடிநீர் விநியோகம், வனத்துறை, சுற்றுசூழல், விஞ்ஞானம் மற்றும் அறிவியல் துறை ஒதுக்கப்பட்டது.
சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷுக்கு ஐடி, கல்வி துறை வழங்கப்பட்டுள்ளது. அச்சம் நாயுடுவுக்கு கூட்டுறவு, விவசாயம், மீன் வளம் மற்றும் கால்நடை துறை ஒதுக்கப்பட்டது. அனிதாவிற்கு உள்துறையும், பாஜக அமைச்சர் சத்யகுமார் யாதவுக்கு ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலம் என மொத்தம் 24 அமைச்சர்களுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டன.
உதவித் தொகை உயர்வு: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுமுதல்வராக கடந்த வியாழக்கிழமை மாலை அமராவதியில் பொறுப்பேற்று கொண்டார். அப்போது அவர் தேர்தல் வாக்குறுதிப்படி மாத உதவித்தொகைகளை அதிகரிக்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.
முதியோர் மாத உதவித்தொகை ரூ. 3 ஆயிரத்தில் இருந்து இனி ரூ.4 ஆயிரமாக உயர்ந்தது. ஆந்திராவில் மாற்றுத்திறனாளி களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதஉதவித்தொகை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது. படுக்கையில் உள்ள நோயாளிகள், சக்கர நாற்காலி உதவியுடன் இருக்கும் நோயாளிகளுக்கு மாதம் இனி ரூ. 5 ஆயிரத்துக்கு பதிலாக ரூ. 15 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
சிறுநீரகம், கல்லீரல், இதயம் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கும், டயாலிஸிஸ் நோயாளிகளுக்கும் மாத உதவித்தொகை ரூ. 5 ஆயிரத்துக்கு பதிலாக இனி ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக் கப்பட்டுள்ளது.