புதுடெல்லி: மதரஸாக்களில் பயிலும் இந்து மாணவர்களை பொதுப் பள்ளிகளுக்கு மாற்றும்படி மத்திய பிரதேச அரசுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் (என்சிபிசிஆர்) பரிந்துரை செய்துள்ளது.
உத்தர பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களில் முஸ்லிம் குழந்தைகளுக்கான மதரஸாக்கள் உள்ளன. இவற்றில் பல மதரஸாக்கள் அங்கீகாரம் இல்லாமல், மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகையையும் எதிர்பார்க்காமல் இயங்குகின்றன. அரசு அங்கீகாரம் பெற்று உதவித் தொகையுடன் செயல்படும் மதரஸாக்களும் உள்ளன.
இந்த இரண்டு வகை மதரஸாக்களிலும் அந்தந்த பகுதி இந்து குடும்பங்களின் குழந்தைகளும் பயில்வது உண்டு. இதற்கு அவர்கள் பகுதி அரசுப் பள்ளிகளில் கிடைக்காத கல்வி மதரஸாக்களில் கிடைப்பது உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.
9,417 இந்து குழந்தைகள்: இந்நிலையில் பாஜக ஆளும் மத்தியபிரதேச மாநில மதரஸாக்களில் என்சிபிசிஆர் சார்பில் சமீபத்தில் ஆய்வு நடைபெற்றது. இதன் தலைவர் பிரியங்க் கணூங்கோ தலைமையிலான குழு நடத்திய ஆய்வில் குழந்தைகள் நலன்களை பாதிக்கும் பல முக்கிய விஷயங்கள் தெரியவந்துள்ளன.
ம.பி. அரசின் அங்கீகாரம் பெற்ற 1,755 மதரஸாக்களில், 9,417 இந்து குழந்தைகளும் பயில்கின்றனர். இவர்கள் அனைவரையும் பொதுப் பள்ளிகளுக்கு மாற்றும்படி ம.பி. அரசுக்கு என்சிபிசிஆர் தலைவர் பிரியங்க் கணூங்கோ பரிந்துரை செய்துள்ளார்.
அடிப்படை வசதிகள் இல்லை: இதுகுறித்து ம.பி. அரசின் தலைமை செயலாளருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசு அங்கீகாரம் பெற்ற 1,755 முஸ்லிம் மதரஸாக்களில், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பல அடிப்படை வசதிகள் இல்லை. இதற்கு அவை அந்த கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வருவதில்லை.
இதே நிலை அங்கீகாரமற்ற மதரஸாக்களிலும் உள்ளது. எனவே, இந்த இரண்டு வகை மதரஸாக்களிலும் பயிலும் இந்து குழந்தைகளை பொதுப் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும்.
இந்து குழந்தைகளுக்கானது போன்ற பிரச்சினைகளால் இதர மாணவர்களும் பாதிக்கப்படும் நிலை இருப்பதால் முஸ்லிம் குழந்தைகளையும் பொதுப் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும். ஏனெனில், இதுபோன்ற மதரஸாக்களின் ஆசிரியர்கள் பலருக்கும் பிஎட் கல்வியும் இல்லை. இதனால் மாணவர்களுக்கு உகந்த முறையில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுவது இல்லை. இதுபோன்ற மதரஸாக்களுக்கு அரசு நிதி உதவி வழங்கினாலும் அதில் பயிலும் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி உரிமை கிடைப்பதில்லை.
இவ்வாறு பிரியங்க் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.