உலக ஜனநாயக நாடுகளில் தேர்தல்கள் தற்போது, ஆரம்ப காலங்களில் பின்பற்றப்பட்டுவந்த வாக்குச் சீட்டு முறையின் அடுத்த பரிமாணமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் நடைபெறுகிறது. வாக்குச் சீட்டு தேர்தல் முறையில் வாக்கு எண்ணிக்கைக்கு பல மணிநேரங்கள் ஆகும். ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்த நேரத்தைக் குறைக்கின்றன.
இருப்பினும், இது மின்னணு சாதனம் என்பதால், ஆளுங்கட்சிகள் தங்களுக்கு ஏற்றவாறு ஹேக் செய்யக்கூடும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியாவில் தற்போது நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, உச்ச நீதிமன்றத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டது.
இந்த நிலையில், X சமூக வலைதளப் பக்கத்தின் CEO எலான் மஸ்க், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி தனது எக்ஸ் சமூக வளைதளப் பக்கத்தில், “புவேர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்ற முதன்மைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நல்லவேளை, ஆவணங்கள் இருந்ததால் சிக்கல் கண்டறியப்பட்டு வாக்குப் எண்ணிக்கை சரி செய்யப்பட்டது. ஒருவேளை ஆவணங்கள் இல்லையென்றால் நீதிமன்றத்தில் என்ன நடக்கும்?” என்று ட்வீட் செய்திருந்தார்.
தற்போது அவரின் டீவீட்டை ரீபோஸ்ட செய்து ட்வீட் செய்திருக்கும் எலான் மஸ்க், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நாம் புறக்கணிக்க வேண்டும். மனிதர்களால் அல்லது AI மூலம் இவை ஹேக் செய்யக்கூடும். இது சிறியதாகத் தெரிந்தாலும், இதன் விளைவு அதிகமானவை” என்று ட்வீட் செய்திருக்கிறார்.
எலான் மஸ்க்கின் கருத்தை ஆதரித்திருக்கும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு `கருப்புப் பெட்டி.’ அவற்றை யாரும் ஆராய அனுமதிக்கப்படுவதில்லை. நமது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை குறித்து கடுமையான கவலைகள் எழுப்பப்படுகின்றன. அரசு நிறுவனங்கள் பொறுப்புக்கூறல் இல்லாதபோது ஜனநாயகம் ஒரு ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்குள்ளாகிறது” என்று ட்வீட் செய்திருக்கிறார்.