நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

புதுடெல்லி,

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5-ந் தேதி நடத்தப்பட்டது. பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சர்ச்சை எழுந்தது.இந்த சலசலப்புக்கு மத்தியில் கடந்த 4-ந் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும், 67 பேர் முழு மதிப்பெண் பெற்றதும் பலத்த சந்தேகத்தை எழுப்பியது.நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக சுப்ரீம் கோர்ட்டிலும், 7 ஐகோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது, கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படும் என்றும், அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் உறுதி அளித்தன.

இதைப்போல நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக கூறப்படுவது பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது; இந்த மனுவுக்கு 2 வார காலத்துக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் பீகாரில் வினாத்தாள் கசிந்ததாக கூறப்படுவதால், அந்த மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.இதற்கிடையே நீட் தேர்வில் குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கோத்ராவில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த முறைகேட்டில் ரூ.2 கோடிக்கு மேல் கைமாறியிருப்பதும் கண்டறியப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு பல்வேறு முறைகேடு புகார்களுக்கு ஆளாகி இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்துமாறு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இந்த தேர்வை எழுதிய 20 மாணவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-நடந்து முடிந்த நீட் தேர்வில் பரவலாக முறைகேடு மற்றும் மோசடிகள் நடந்து உள்ளன. வினாத்தாள் கசிந்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தேர்வின் புனிதத்தன்மையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. எனவே தகுதியான மாணவர்களை மருத்துவ கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதற்கு மறுதேர்வு மட்டுமே உதவும்.

நீட் தேர்வு முடிவுகளில் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 பெற்று இருக்கிறார்கள். 620 முதல் 720 வரை மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக 400 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த முறைகேடுகளை சி.பி.ஐ அல்லது வேறு ஏதாவது தன்னாட்சி விசாரணை அமைப்பு அல்லது கோர்ட்டு மேற்பார்வையில் அமைக்கப்படும் கமிட்டி மூலம் முழுமையாக விசாரிக்க வேண்டும். இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான திறமையான மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.