செயிண்ட் லூசியா,
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடர் லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் செயிண்ட் லூசியாவில் இன்று நடைபெற்ற 35வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து – ஆஸ்திரேலியா அணிகள் ஆடின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக மெக்முல்லன் 60 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 186 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 68 ரன், ஸ்டாய்னிஸ் 59 ரன் எடுத்தனர். இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்த ஸ்டாய்னிஸ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, சூழ்நிலைகளை கண்டறிந்து பந்தை கடினமாக அடித்து நல்ல ஷாட்டுகளை விளையாடுவதே இப்போட்டியில் என்னுடைய வழக்கமான திட்டமாகும். மைதானத்தில் வலுவான காற்று இருந்தது. அதுவே அடிப்பதற்கான இடமாகவும் இருந்தது. பிட்ச் நன்றாக இருந்தது. அதில் ஸ்காட்லாந்து வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.
நானும், டிராவிஸ் ஹெட்டும் நீண்ட நேரம் பேட்டிங் செய்வதைப் பற்றி பேசினோம். முக்கிய நேரத்தில் டிராவிஸ் ஹெட் 3 சிக்சர்கள் அடித்தது போட்டியை மாற்றியது. நான் தொடர்ச்சியாக விளையாடி வருகிறேன். கடந்த 3 – 4 மாதங்களாக ஐ.பி.எல் தொடரில் தொடர்ச்சியாக எனக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அது பார்மை கண்டறிந்து இந்த ரன்களை அடிப்பதற்கு மிகவும் உதவியது. இவ்வாறு அவர் கூறினார்.