புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்காக மூடப்பட்டதால் ஏஎப்டி திடலில் தற்காலிக பஸ் நிலையம் இன்று முதல் இயக்கப்படுகிறது. இந்நிலையில், நிழற்குடை, கடைகள் இல்லாததால் மக்கள் தவித்தனர்.
புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ள பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் பகுதி பகுதியாக நடந்து வருகின்றன. பஸ் நிலையத்தின் மைய பகுதியில் இரும்பு தகடுகள் கொண்டு அடைக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. இதனால் பஸ் நிலையத்தில் கடும் இட நெருக்கடி ஏற்பட்டது.
இதனையடுத்து பஸ் நிலையத்தை தற்காலிகமாக இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டது. ஏஎப்டி மில் திடலில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகளும் தொடங்கின. மக்களவைத் தேர்தல் வந்ததால் தற்காலிக பஸ் நிலைய பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதே நேரத்தில் பஸ் நிலையத்தில் இட நெருக்கடியால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
தேர்தல் முடிவு வெளியாகி மாதிரி நன்னடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்ட பின் மீண்டும் பணிகள் தொடங்கின. வெளியூர் செல்லும் பஸ்கள், உள்ளூர் நகர பஸ்கள் நிறுத்த தனித்தனி இடம் அமைக்கப்பட்டு பயணிகள் வசதிக்காக நிழற்பந்தல், குடிநீர், கழிவறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும், ஆட்டோ, டெம்போ நிறுத்த இடங்களும், பயணிகளின் இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் இடமும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய பஸ்நிலையம் மூடப்பட்டு, தற்காலிக பேருந்து நிலையம் இன்று முதல் செயல்பட தொடங்கியது. காலை 6 மணி முதல் அனைத்து பஸ்களும் ஏஎப்டி மைதானத்தில் இருந்து புறப்பட்டு செல்கின்றன.
மைதானத்தில் இருந்து வெளிவரும் சென்னை, திண்டிவனம் மற்றும் விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் புதுச்சேரி-கடலூர் சாலையில் வலது புறம் திரும்பி சென்று மறைமலை அடிகள் சாலையில் இடதுபுறம் திரும்பி செல்கின்றன.
கடலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் புதுச்சேரி-கடலூர் சாலையில் இடதுபுறம் திரும்பி வழக்கம் போல் செல்கின்றன. ரயில்வே கேட் போடப்பட்ட போது நெரிசலை தவிர்க்க கடலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் கடலூர் சாலையின் வலது புறம் திரும்பி மறைமலை அடிகள் சாலையில் இடது புறம் திரும்பி இந்திரா சதுக்கம், 100 அடி சாலை மேம்பாலம் வழியாக செல்கிறது. தற்காலிக பஸ் நிலையத்தால் கடலூர் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலீஸார் பணியில் உள்ளனர். பாதுகாப்பு பணியிலும் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புறப்படும் நேரத்துக்காக காத்திருக்கும் (வெயிட்டிங் டைம்) பஸ்கள் இட நெருக்கடி ஏற்படுவதை தடுக்க மறைமலை அடிகள் சாலையில் வெங்கட சுப்பாரெட்டி சதுக்கத்துக்கு அருகில் உள்ள பழைய திருவள்ளூர் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அவரவர் நேரத்துக்கு ஏற்றார் போல் தற்காலிக பஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லலாம் என நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
தவித்த பயணிகள்: புதிய பஸ் நிலையம் அதிகாலையே மூடப்பட்டதால் அங்கு வந்த பணிகள் தவித்தனர். பின்னர் தற்காலிக பஸ் நிலையத்தில் எந்த ஊருக்கு செல்லும் பஸ் என்பதை தெரிவிக்கும் அறிவிப்பு பலகை எதுவும் இல்லை. இதனால் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய பஸ்கள் எங்கு நிற்கும் என்று தெரியாமல் அலைந்து திரிந்து விசாரித்து செல்ல வேண்டியதாக உள்ளது.
மேலும் பஸ்ஸுக்கு காத்திருக்கும் பயணிகள் நிற்பதற்கு என தனியாக நிழற் குடை ஏதும் அமைக்கப்படவில்லை. பயணிகள் வசதிக்காக டீக்கடை பழக்கடை குளிர்பான கடை என எந்த கடைகளும் இன்னும் திறக்கப்படவில்லை. ஓரிரு நாளில் இவற்றிற்கு இடம் ஒதுக்கப்படும் என நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.
தற்காலிக பஸ் நிலையத்தின் செயல்பாடு குறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர். தற்போதைய நிலை பற்றி அவரிடம் கேட்டதற்கு, “3 மாதத்துக்குள் பஸ் நிலையத்தின் கட்டுமான பணிகளை முடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுவரை தற்காலிக பஸ் நிலையம் ஏஎப்டி மைதானத்தில் இயங்கும், முதல் நாள் என்பதால் சில அசவுரியங்கள் இருக்கும். இதனை பொதுமக்களும் ஆட்டோ-டெம்போ- பஸ் ஓட்டுனர்களும் பொறுத்துக் கொள்ள வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.